Skip to main content

சூரியின் பரோட்டா... அப்புக்குட்டியின் மாமியார்... வெண்ணிலா கபடி குழு - விமர்சனம்

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி ஆகியோரை தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து சுசீந்திரன் என்ற ஒரு நல்ல இயக்குனரை தமிழ் திரையுலகுக்குக் கொண்டுவந்தது 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படம். தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் பார்ட் 2 காய்ச்சல் இந்தக் குழுவுக்கும் ஏற்பட்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது  வெண்ணிலா கபடி குழு -2. ஆனால் இந்த முறை படத்தை இயக்கியிருப்பது சுசீந்திரன் அல்ல, அவருடன் பணியாற்றிய செல்வசேகரன். சுசீந்திரனின் மூலக்கதையில் வெளிவந்திருக்கும் இந்தக் குழு, அந்தக் குழு அடைந்த வெற்றியை பெற்றதா?

 

vikranth



1989ல் அரசு பஸ் டிரைவராக இருக்கும் பசுபதி பொறுப்பில்லாமல் வேலை பார்ப்பதை தவிர்த்து கபடி மேல் பைத்தியமாக இருக்கிறார். கேசட் கடை வைத்திருக்கும் இவரது மகன் விக்ராந்த்திற்கு அப்பா செய்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரை கண்டபடி விக்ராந்த் திட்ட, அதை பொறுத்துக்கொள்ளாத அவர் அம்மா அனுபமா குமார் பசுபதி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். பசுபதி வெண்ணிலா கபடி குழுவை சார்ந்த முன்னாள் கபடி வீரர் என்பதும், தான் கபடியில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மகன் விக்ராந்த்துக்காகக் கைவிட்டதையும் தன் தாய் மூலம் தெரிந்துகொள்ளும் விக்ராந்த் தந்தையின் ஆசையை தான் நிறைவேற்ற முடிவு செய்து வெண்ணிலா கபடி குழுவில் சேர்ந்து சாதிக்க முடிவெடுக்கிறார். இதையடுத்து முதல் பாகத்தில் விஷ்ணு இறந்த பிறகு சிதறிக் கிடக்கும் வெண்ணிலா கபடி குழு என்னவானது, விக்ராந்த் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா எனபதே வெண்ணிலா கபடி குழு 2 படத்தின் கதை.
 

 

vennila kabadi kuzhu



முதல் பாகத்தின் திரைக்கதை டெம்பிளேட்டிலேயே இப்படமும் நகர்கிறது. முதல்பாதி முழுவதும் கொஞ்சம் கபடி, குடும்பம், காதல், நட்பு என பழைய ரூட்டில் பயணித்து பின் இரண்டாம் பாதி முழுவதும் கபடியிலேயே பயணித்துள்ளது. கதைக்கரு மற்றும் முதல் பாதியை தொடர்புபடுத்தியது என கதை தேர்வில் கவனமாக இருந்து கவனம் ஈர்த்த இயக்குனர் செல்வசேகரன் காட்சியமைப்பில் சற்று கோட்டை விட்டுள்ளார். குறிப்பாக முதல் பாகத்தில் கவனம் ஈர்த்த பாடல்கள் மற்றும் சூரி காமெடி இதில் இருக்கின்றன, ஆனால் மிக சுமாராக இருப்பது சற்று அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், கபடி விளையாட்டு சீக்குவன்ஸ் ஆகியவை படத்தை தாங்கி பிடித்துள்ளது.

 

kabadi match



நாயகன் விக்ராந்த் கதாபாத்திரத்தில் நச் என பொருந்தி பர்ஃபெக்ட் கபடி வீரராகத் தெரிகிறார். நடிப்பிலும் உற்சாகமாக காணப்படுகிறார். அவரது அர்பணிப்புக்கான வெற்றி கூடிய சீக்கிரம் கிடைக்கவேண்டும். சம்பிரதாய நாயகியாக வந்து செல்கிறார் அர்த்தனா பினு. படத்திற்கு ஜீவனாக பசுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்குத் தூணாக இருக்கிறார். கோச்சாக வரும் கிஷோர் முதல் பாகத்தைப் போலவே  சிறப்பாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கஞ்சா கருப்பு, சூரி, அப்புக்குட்டி, அருள்தாஸ், ரவி மரியா, ஆகியோர் அவரவர் வேலையை செய்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு முதல் பாகத்தில் ஒவ்வொரு பாத்திரமும் ஒரு விதத்தில் ஈர்த்தது. அந்த ஈர்ப்பு இதில் மிஸ்ஸிங்.

செல்வகணேஷ் இசையில் பாடல்கள் ஓகே. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் கபடி மைதானமும் விளையாட்டும் சிறப்பு. 1989ல் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் காட்சியமைப்பில் செயற்கைத்தனங்கள் சற்று மேலோங்கிக்  காணப்படுவதும் படத்தின் நீளமும் பலவீனங்கள்.

வெண்ணிலா கபடி குழு 2 - பார்ட் 2 எடுத்தவர்களின் குழுவில் சேர்ந்துகொண்டது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.