Skip to main content

ரஜினின்னா 'கரிஸ்மா'... முருகதாஸ்ன்னா? தர்பார் - விமர்சனம்

Published on 09/01/2020 | Edited on 10/01/2020

ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், ஸ்வாக், ஸ்டைல், ஹீரோயிசம்... இன்னும்... ஒரு நாயகனின் கவர்ச்சியை குறிக்க இப்போது பயன்படுத்தப்படும் அத்தனை வார்த்தைகளுக்கும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்த்தமாக நின்றுகொண்டிருக்கும் தமிழ் திரை நாயகன் ரஜினிகாந்த். காண்போரில் பெரும்பாலானோரை கவர்ந்து, இன்ஸ்பிரேஷனாகத் திகழும் வண்ணம் ஒருவருக்கு இயல்பாக இருக்கும் ஈர்ப்பு அம்சத்தை 'கரிஸ்மா' (charisma) என்று கூறலாம். ரஜினிக்கு, திரையில் அந்த கரிஸ்மா உண்டு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். 2020ஆம் ஆண்டின் முதல் பெரிய படமாக வெளிவந்திருக்கும் 'தர்பாரி'ல் ரஜினியின் கரிஸ்மா தொடர்கிறதா? ரசிகர்கள் மனதில் ரஜினியின் 'தர்பார்' தொடர்கிறதா? 

 

rajinikanth



ஆதித்யா அருணாச்சலம்... எடுத்துக்கொண்ட காரியத்தை இடையில் நிறுத்தாத, போலீஸ் வேலைக்காக தாடியை எடுக்காத, எவர் எதிரில் வந்தாலும் அஞ்சாத, குற்றம் செய்தவர் என தான் நினைப்பவரை கொலை செய்யத் தயங்காத, பேட் காப் (bad cop). மும்பை காவல்துறையின் மேல் மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்க, மும்பை காவல்துறையை புணரமைக்க, டெல்லியில் இருந்து நியமிக்கப்படுகிறார் ஆதித்யா அருணாச்சலம் (ரஜினிகாந்த்). மும்பையில் களமிறங்கியவுடன் எதிர்கொள்ளும் ஒரு பெரிய இடம் தொடர்புடைய குற்ற வழக்கை பயன்படுத்தி, மும்பையை க்ளீன் செய்யத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தில் தனது மகள் (நிவேதா தாமஸ்) கொலை செய்யப்பட, ரௌத்திரம் கொண்டு பழிவாங்கும் சிம்பிள் கதைதான் ஏ.ஆர்.முருகதாஸின் 'தர்பார்'.

நூறு வில்லன்கள் இருந்தாலும் சிங்கிளாக சென்று வெளுத்துவாங்கும் 'பேட் காப்'பாகவும் வேறு வேறு ஆங்கில்களில் ஐடியா பண்ணி துப்பறியும் 'ஸ்மார்ட் காப்'பாகவும் அன்பை பொழியும் தந்தையாகவும் குறும்பு  வழியும் சீனியர் காதலராகவும் முதல் பாதி முழுவதும் ரஜினியின் 'தர்பார்' களைகட்டுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியை போலீசாகக் காட்டியுள்ள முருகதாஸ், ஏற்கனவே அவரிடம் ரசிக்கப்படும் அம்சங்களை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். ஸ்மார்ட் ஐடியாக்கள், அதிரடிகள் என முதல் பாதியில் முருகதாஸின் எழுத்து நாம் ரசிக்க பல விஷயங்களை வைத்துள்ளது. ஆனால், ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஓப்பனிங் சீனில் அதிகம் யோசிக்கவில்லை போல... ரஜினி படங்களின் ஈர்ப்பாக இருக்கும் இன்னொரு அம்சம் பன்ச் வசனங்கள். 'தர்பாரில்' எந்தப் பன்ச்சும் பலமாக இல்லை. ஆனால், ஆங்காங்கே சிறு சிறு அரசியல் குத்துகளில் கைதட்டல் பெறுகிறார் முருகதாஸ்.

 

nayanthara



மும்பை குற்றங்கள், பின்னணி, நயன்தாராவுடன் குறும்பு நட்பு, யோகிபாபுவின் கவுண்ட்டர் கலாட்டா என கலகலப்பாக, ஓரளவு விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்ற முருகதாஸ், இரண்டாம் பாதியில் முழு பாரத்தையும் ரஜினியின் தோள்களில் வைத்துவிட்டார். சுவாரசியம், பலம் இல்லாத வில்லன் பாத்திரம் (சுனில் ஷெட்டி), நாயகன் - வில்லன் இருவருக்குமிடையில் விறுவிறுப்பான தேடல், வேட்டை, சண்டை எதுவும் இல்லாதது, மீண்டும் மீண்டும் சண்டையிலேயே சால்வ் ஆகும் பிரச்சனைகள் என த்ரில்லராக இல்லாமல் ஆக்ஷனாகவே நகர்ந்து முடிகிறது படம். அங்கு மனதில் நிற்பது ரஜினி - நிவேதா தாமஸ் இருவரின் பாசக் காட்சிகள் மட்டுமே. மும்பை காவல்துறைக்கு ஏற்பட்ட பெரும் களங்கம், போதை மருந்தால் சீரழிக்கப்படும் இளைஞர்கள் என சுவாரஸ்யத்துக்கான சாத்தியங்கள் நிறைந்த களத்தை எடுத்துக்கொண்ட முருகதாஸ், திரைக்கதையில் நின்று விளையாடியிருக்கலாம். ரமணாவின் மருத்துவமனை காட்சி, துப்பாக்கியின் ஷூட்-அவுட் காட்சி ஆகியவற்றில் இருந்த முருகதாஸ் மேஜிக் இதில் மிஸ்ஸிங். சில ஐடியாக்கள் 'செம்ம' சொல்லவைத்தாலும் அவை போதவில்லை. அதுபோல வில்லன் பாத்திரத்திலும் துப்பாக்கி, ஏழாம் அறிவு, ஸ்பைடர் போன்ற சுவாரசியம் இல்லை. ரஜினியின் ஸ்டைலும் டெலிவரியுமே படத்தின் இறுதிக்கட்டத்தை நகர்த்துகின்றன.


சூப்பர் ஸ்டாரின் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்குப் பெரிய வேலையில்லை. அவ்வப்போது வந்து அழகால் ஈர்த்து செல்கிறார் நயன்தாரா. நாயகியின் 'லில்லி' பாத்திரத்தை விட நிவேதா தாமஸ் நடித்திருக்கும் 'வள்ளி' (நாயகன் மகள்) பாத்திரம் வலுவாக இருக்கிறது. நிவேதா சிறப்பாக நடித்துள்ளார். ரஜினியை ஜாலியாக சீண்டும் யோகி பாபுவின் கவுண்ட்டர் வசனங்கள் சிரிக்க, ரசிக்க வைக்கின்றன. 'சந்திரமுகி' படத்தில் ரஜினி பிரபுவிடம் சொல்வது போல, ரசிகர்கள் யோகி பாபுவிடம் சொல்லலாம்... "நீங்க குண்டா இருந்தாதான் அழகு", இளைத்துவிட்டார். இந்தப் பாத்திரங்களைத் தவிர யாரும் மனதில் நிற்காமல் செய்து விடுகின்றன, டப்பிங், மொழி கோளாறுகள். முதல் பாதி வில்லனாக வரும் நவாப் ஷா, மெயின் வில்லனான சுனில் ஷெட்டியை ஓவர்டேக் செய்துவிடுகிறார்.

 

 

sunil shetty



அனிருத் இசையில் 'சும்மா கிழி' பாடல், தரமான அனுபவம், அதன் படமாக்கலில் எதுவும் சிறப்பில்லை என்றாலும். தன் இடைவிடாத பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு 'மாஸ்' ஏற்ற முழு மூச்சாக முயன்றிருக்கிறார். பல இடங்களில் வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது, சில இடங்களில் கொஞ்சம் ஓவராகியிருக்கிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு எந்த இடத்திலும் ஸ்பெஷலாக உணர வைக்கவில்லை, அதே நேரம் குறையுமில்லை. சண்டைக் காட்சிகளில் சூப்பர் ஸ்டாரின் அசைவுகளையும் அடிகளையும் அதிரடியாகக் காட்டுகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் பல காட்சிகள் தப்பித்துவிட்டன. கஜினி, துப்பாக்கி போன்ற படங்களிலேயே சில பாடல்கள், காட்சிகள் இல்லாவிட்டால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றே தோன்றும். ஆனால், வணிகம் என்ற காரணம் கருதி  வைத்திருப்பார் இயக்குனர். அவை அந்தப் படங்களின் உறுதியால் படங்களை பாதிக்கவில்லை. ஆனால், இங்கே, இரண்டாம் பாதியில் வரும் திருமண பாடல், படத்தை பாதிக்கிறது, நம்மை சோதிக்கிறது.

மொத்தத்தில் இது ரஜினியின் 'தர்பார்'... அங்கே முருகதாஸ் கொஞ்சம் வீக்காக இருக்கிறார்.                                                    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.