Skip to main content

சமுத்திரக்கனி இப்படி செய்யலாமா? ஆண்தேவதை - விமர்சனம்

Published on 13/10/2018 | Edited on 15/10/2018

விவசாயம் செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பது சரியா, தவறா?

பெண்கள் வேலைக்கு செல்வது பாதுகாப்பானதா, ஆபத்தானதா?

ஆண்கள், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது கடமையா, தியாகமா?

வருமானம் அதிகம் வேண்டுமென்பதும் வசதியாக வாழவேண்டுமென்பதும் நல்ல எண்ணங்களோ தீய எண்ணங்களா?

 

aan devadhai 1



இப்படி பல கேள்விகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ விவாதித்திருக்கிறது 'ஆண் தேவதை'. சமுத்திரக்கனி... ஆண் தேவதை என்ற பெயருக்கு மிகப் பொருத்தமான நடிகர்; பொதுவாக. இந்தப் படத்தில் எப்படி என்பதைப் பார்ப்போம்.

குட் டச், பேட் டச் குறித்து குழந்தைகளுக்கு சமுத்திரக்கனி விவரிப்பதில்  தொடங்குகிறது படம். தமிழ் சூழலில் திரைப்படங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்குக்காகத்தான் பார்க்கப்படுகின்றன என்றாலும், தன் படங்களில் முடிந்த அளவு நல்ல விஷயங்களை மக்களுக்கு சொல்லிவிட வேண்டுமென்ற நல்ல எண்ணம் உடையவர் சமுத்திரக்கனி. நாடோடிகள், போராளி போன்ற படங்களில் அந்தக் கருத்துகள் காட்சிகளாக கதையோடு இணைந்து வந்தன. சாட்டையில் தொடங்கி பின் வந்த படங்களில் சமுத்திரக்கனி நேரடியாகப் பேசும் வசனங்களாகிவிட்டன. என்றாலும், இவர் சொன்னால் கேட்கலாம் என்ற எண்ணம் வரும் நடிகர்களுள் சமுத்திரக்கனி ஒருவர். ஆனாலும், ஒரு திரைப்படம் என்பதில் கதையைத் தாண்டி இவை செல்லும்போது அது திரைப்படத்துக்கு ஆபத்துதான். தாமிரா இயக்கத்தில் 'ஆண் தேவதை' எப்படி?

 

samuthirakani aan devadhai



சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு ஒருவருக்கொருவர் துணையாக, மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இருவரும் தங்கள் பணிகளின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள், வளர்ந்து வருபவர்கள். இரட்டைக் குழந்தைகள் பிறக்க, அவர்களை வளர்ப்பதில் ஏற்படும் சிரமத்தாலும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் நிறைவின்மையாலும் இருவரில் ஒருவர் வேலையை விடுவது என்று முடிவெடுக்கின்றனர். ரம்யா பாண்டியன், தன் பணியில் அதிக உயரத்துக்குச் செல்ல வேண்டும், நிறைய சம்பாரிக்க வேண்டும் என்ற கனவுகள் உடையவர். 'நல்ல ஸ்கூலுக்கு அனுப்பலைன்னா நாளைக்கு குழந்தைங்க வளர்ந்து நம்மள கேள்வி கேப்பாங்க' என்று நம்புபவர். சமுத்திரக்கனியோ, 'என்னால அந்த ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்ட முடியலைன்னா என் குழந்தைகிட்ட எடுத்துச் சொல்லி என் வருமானத்துக்கேத்த ஸ்கூலில் சேர்ப்பேன்' என்று கூறுபவர். சமுத்திரக்கனி வேலையை விட்டுவிட்டு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடிவு செய்கிறார். இப்படிப்பட்ட இருவரும் எடுத்த முடிவால் என்ன விளைவுகள் நேர்ந்தன என்பதே 'ஆண் தேவதை'.

கணவன் மனைவி உறவு எப்படியிருக்க வேண்டும், குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பல நல்ல விஷயங்களை ஆங்காங்கே பேசியிருக்கிறார் தாமிரா. ஒரு மோசமான லாட்ஜில் சமுத்திரக்கனி தன் குழந்தையோடு தங்க நேர, அங்கு ஒரு விலைமாதுவுக்கு அவர் உதவும் அந்தக் காட்சி ஒரு நல்ல சாம்பிள். உலகில் யாரும் தனித்து விடப்படுவதில்லை, தெரிந்தவர்கள் எல்லோரும் கைவிட்டாலும் கூட யாரேனும் ஒருவர் கைகொடுப்பார் என்னும் நம்பிக்கை செய்தி சொல்லும் காட்சிகள் நன்று. கடவுளுடன் சமுத்திரக்கனியும் அவரது மகளும் விளையாடும் விளையாட்டு அழகான ஐடியா.
 

aan devadhai ramya pandiyan



நேர்மறையாக இத்தனை விஷயங்கள் இருந்தாலும் படத்துக்கு எதிர்மறையாவது சொல்ல வந்த கருத்தில் நேர்ந்த குழப்பம்தான். விவசாயத்தை ஆதரிக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பது மறுக்க முடியாத தேவை. அதே நேரம் இத்தனை கார்ப்பரேட் நிறுவனங்களிலும் வேலை செய்பவர்கள் நம்மிடையே இருந்து வந்தவர்கள்தானே? எத்தனையோ முதல் தலைமுறை பட்டதாரிகள் அந்த வேலைவாய்ப்புகளால் வாழ்க்கையில் முன்னேறியிருக்கின்றனர்தானே? கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலையென்றாலே அவர்கள் வாழ்க்கை முறை இப்படித்தான் ஆகிவிடும் என்று சொல்வதுபோன்ற உணர்வு. வங்கிக் கடன், பெண்கள் பணிபுரிவது என இன்றைய வாழ்வில் இன்றிமையாத, பல குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் பல விஷயங்களும் இறுதியில் எதிர்மறையாக முடிவது போல கதையை அமைத்தது கருத்தாகவும் நம்மை கவரவில்லை, படத்துக்கும் உதவவில்லை. தாமிராவும் சமுத்திரக்கனியும் இப்படி செய்யலாமா?

படத்தில் எழுபது எம்பதாயிரம் சம்பளம் வாங்குபவர்கள் BMW கார் வாங்குவதாகக் காண்பிக்கிறார்கள். வெளியுலகம் அப்படித்தான் இருக்கிறதா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. இப்படி படம் பார்க்கும்போதே நமக்குள் எதிர்வாதங்கள் எழுகின்றன. கருத்துகளைத் தாண்டி ஒரு படமாக, பெரிதாக புதிய விஷயங்கள் இல்லாத, திருப்பங்கள் இல்லாத ஆச்சரியங்கள் அளிக்காத, சின்னச் சின்ன சிரிப்புகளைத் தருவதாக, சின்னச் சின்ன ரசிக்கக்கூடிய வசனங்கள் உள்ளதாக இருக்கிறது ஆண் தேவதை.

சமுத்திரக்கனி, ஒரு நடிகராக எப்பொழுதும் போல நிறைவாக செய்திருக்கின்றார். நடிகராக இன்னும் அவரை வேறு நிறங்களில் பார்க்க விரும்புகிறார்கள் ரசிகர்கள். ரம்யா பாண்டியன், மிடில் க்ளாஸிலிருந்து மெல்ல வளரும் கார்ப்பரேட் யுவதியாக பொருத்தமாக இருக்கிறார், ஓரளவு அழுத்தமாக நடித்தும் இருக்கிறார். படத்தில் பெரியவர்களைத் தாண்டி  குழந்தைகள் மோனிகாவும் கவினும் மனதில் நிற்கிறார்கள். காளி வெங்கட், ராதாரவி, இளவரசு, அறந்தாங்கி நிஷா இன்னும் பலர் படத்தில் இருக்கின்றனர்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு நகரத்தில் செல்ல இடமில்லாமல் தவிக்கும் அப்பா-மகளின் வெறுமையை நமக்கும் கடத்துகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை காட்சிகளின் கணத்தை அதிகரித்திருக்கின்றது. பாடல்கள் படத்துடன் கடந்து செல்கின்றன.

ஆண் தேவதை - அன்பு தேவதையாகவும் கொஞ்சம் ஆதிக்க தேவதை போலவும் தோன்றுகிறது                                         

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“சுழற்சியை நோக்கி நகரும் விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about vijay political entry

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனு படம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம்.  

படம் இல்லாமல் தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறது இந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம். 

எல்லா வகையிலும் தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடே ஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில், “திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.