Skip to main content

பழைய ரூட்டுக்கே போகிறாரா 'பட்டாஸ்' தனுஷ்? பட்டாஸ் - விமர்சனம்

ஒரு பெரிய வெற்றிப் படத்தில் நடித்துவிட்டால் அந்த நடிகரின் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே கூடிவிடுவது தமிழ் திரையுலகில் வழக்கமானது. அதுவும் பல வகைகளிலும் பாராட்டப்பட்ட ஒரு படத்தில், மிக பக்குவமான பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து 'அசுர' வெற்றி பெற்ற பிறகு தனுஷின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இடையில் வந்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' முன்பே முடிக்கப்பட்டது என்பதை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் அறிந்திருந்தனர். இப்படி எதிர்பார்ப்புக்கு இடையில் வந்திருக்கும் 'பட்டாஸ்' மூலம் தனுஷ் அடுத்த கட்டத்துக்குப் போகிறாரா அல்லது 'மாரி' ஸ்டைல் பழைய ரூட்டுக்கே திரும்புகிறாரா?

 

pattas dhanush'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை', 'கொடி' என சுவாரசியமான பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் இந்த முறை, ட்ரெயிலரை பார்த்தே கணிக்கக்கூடிய எளிய கதையோடு வந்திருக்கிறார். சென்னையில் தன் வளர்ப்புத் தந்தை முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் நண்பன் சதீஷ் (கலக்கப் போவது யாரு) இருவருடனும் சேர்ந்து திருட்டுத் தொழில் செய்து வாழ்கிறார் தனுஷ். ஒரு கொலை குற்றத்துக்காக சிறையில் ஆயுள் தண்டனையை முடித்துவிட்டு விடுதலையாகும் சினேகா, தனுஷைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமடைகிறார். திருடன் 'பட்டாஸ்' தனுஷின் தந்தை 'திரவிய பெருமாள்' தனுஷ் ஒரு மிகச் சிறந்த 'அடிமுறை' வீரர், ஆசான். அவரது தாய் 'கன்யாகுமரி' சினேகா. இவர்களிடமிருந்து மகன் எப்படி பிரிந்தார் என விரிகிறது ஃப்ளாஷ்பேக். என்ன நடந்திருக்குமென்று எந்த ஒரு தமிழ் திரைப்பட ரசிகராலும் சொல்லிவிட முடியும். இதன் பிறகு என்ன நடக்குமென்றும் எல்லோராலும் சொல்ல முடியும். இதுதான் 'பட்டாஸ்'.

 

 

pattas snehaஇப்படி, வழக்கமான எளிதான கதையில் எது நம்மை ஈர்க்கிறது, மகிழ்விக்கிறது? முக்கியமாக, முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பும், அழுத்தமான ஃப்ளாஷ்பேக்கும்தான். தனுஷ், 'பட்டாஸ்' பாத்திரத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த துறுதுறுப்பு, கலகலப்பாக இருக்கிறார். 'திரவிய பெருமாள்' பாத்திரத்தில் மிகவும் பக்குவமான, உறுதியான, வீரன் என நம்பும்படியான சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். வெகு நாட்களுக்குப் பிறகு சினேகாவிற்கு சரியான பாத்திரம், வீரமும் உறுதியுமான தாய். அதை மிக சிறப்பாக நடித்து மெருகேற்றியிருக்கிறார். இந்த இருவரின் பாத்திரங்களும் நடிப்பும் படத்திற்கு பெரும் பலம். 'அடிமுறை' என்ற ஆதித்தமிழ் தற்காப்புக் கலை குறித்த காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் பல 'கூஸ்பம்ப் மொமெண்ட்'களை தருகின்றன. சண்டை காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்பாராயனுக்கு ஸ்பெஷல் லைக்ஸ்.

 

dhanushஇதை தவிர படத்தில் இருக்கும் மற்றவை அனைத்தும் இடத்தை நிரப்ப வைக்கப்பட்டவை என்றே தோன்றுகிறது. படத்தின் ஆரம்பப் பகுதிகளில் வரும் தனுஷ் - சதீஷ் - முனீஷ்காந்த் நகைச்சுவை ஆங்காங்கே மட்டுமே சிரிக்க வைக்கின்றன. மெஹரீன் பிர்சாதா, ஆரம்பத்தில் வழக்கமான லூசுப்பெண் போலவே வருகிறார், பிறகு நாயகனின் நோக்கத்தில் துணை நிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், நடிப்பில் ஓகே என்ற அளவில்தான் இருக்கிறார். வில்லன் நவீன் சந்திராவின் நடிப்பில் வீரியம் சற்று குறைவே. விவேக் - மெர்வின் இசையில் 'சில் ப்ரோ' குதூகலத்தையும் 'அடிமுறை' பின்னணி இசை அவ்வப்போது பரவசத்தையும் தருகின்றன. 'சிவ தாண்டவ ஸ்தோத்திர'த்தின் மெட்டை பயன்படுத்தி காட்சிக்கு பலம் கூட்டி பின்னணி இசைக்கு கைதட்டல் பெற்றிருக்கிறார்கள். ஓம் ப்ரகாஷின் ஒளிப்பதிவு முதல் பாதியில் வண்ணங்களின் விளையாட்டாகவும் ஃப்ளாஷ்பேக்கில் கதையின் வெம்மை சொல்லும் செம்மை நிறத்திலும் சிறப்பாக இருக்கிறது. வழக்கமான கதையை வழக்கமான வரிசையில் தொகுத்திருக்கிறார் பிரகாஷ் மப்பு.

இயக்குனர் துரை செந்தில்குமார், பீரியட் பகுதிகளிலும் கூட ரொம்ப சீரியஸான பெரிய ஒழுக்கத்தையெல்லாம் வைத்து அழுத்திக்கொள்ளாமல் ஒரு பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறார். தனுஷ், சினேகா நடிப்பும் தமிழர்களைக் காத்த 'அடிமுறை' கலையும் படத்தை காத்திருக்கின்றன. படத்தில் அடுத்தடுத்து என்ன நடக்குமென்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதில் ஏதேனும் ஆச்சரியங்களை வைத்திருந்தால் இன்னும் அதிகமாக அதிரடியாக வெடித்திருக்கும்  இந்தப் 'பட்டாஸ்'. ஆனாலும் நமுத்துப் போகவில்லை.