ரொம்ப வருட காலமாக தமிழில் படம் இயக்காமல் ஹிந்தியில் ஷேர்ஷா மூலம் மிகப்பெரும் உச்சத்தை தொட்டு விட்டு மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் நேசிப்பாயா. இதனாலேயே இந்த படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை இந்த நேசிப்பாயா திரைப்படம் பூர்த்தி செய்ததா, இல்லையா?
புதுமுக நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளி எதர்ச்சியாக தொலைக்காட்சி பார்க்கும் பொழுது தன்னுடைய காதலி ஆதித்ய சங்கர் போர்ச்சுகல் நாட்டில் ஒரு கொலை குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைப்பதை பார்த்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போர்ச்சுகல் நாட்டுக்கு செல்கிறார். போன இடத்தில் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தன் காதலியை கொலை குற்றத்தில் இருந்து மீட்டாரா, இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை.
நாயகியை பார்த்தவுடன் காதல் என்ற அரதபழசான ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு அவரை பின்தொடர்வது துரத்தி துரத்தி காதலிப்பது போன்ற பார்த்து பழகிய விஷயங்களை வைத்து படம் முழுவதையும் ஜெயில் மற்றும் காதல் காட்சிகளாக நகர்த்தி படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். தனக்கே உரித்தான காதல் காட்சிகளை மிகவும் பிரஷ்ஷாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் காட்சிப்படுத்திய விஷ்ணுவர்தன் வழக்கு ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் நேர்த்தியாக படம் பிடித்து பார்ப்பவர்களுக்கு அயற்சி ஏற்படாதவாறு செய்திருக்கிறார். அதேபோல் திரைக்கதையிலும் எந்த ஒரு இடத்திலும் பெரும்பாலும் தொய்வில்லாத படி செய்து ரசிக்க வைத்து இருக்கிறார். இருந்தும் கதையும் கதாபாத்திரமும் கதைக்கான காரணமும் ஏற்கனவே நாம் பலமுறை பார்த்து பழகிய ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு செய்திருப்பது மட்டும் ஏனோ நம்முடன் ஒட்ட மறுக்கிறது. குறிப்பாக ஒரு சிறிய ஒன் லைன் கதையை வைத்துக்கொண்டு அதை 2 மணி நேர படமாக விரித்து நேர்த்தியாக காட்ட முயற்சித்த இயக்குனர் கதைக்கும் கதை மாந்தர்களுக்குமான முக்கியத்துவத்தை இன்னமும் கூட அதிகப்படுத்தி இன்னமும் இக்கால கட்டத்திற்கு ஏற்ப சிறப்பான படமாக கொடுத்து இருக்கலாம்.
அறிமுக நாயகன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி முதல் படமாக இதை நடித்திருந்தாலும் கதாபாத்திரத்தில் சற்றே உள்வாங்கி நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதையே இப்படத்திற்கு கொடுத்து இருக்கிறார். நடிப்பில் இன்னமும் கூட தேர்ச்சி தேவை. நாயகி அதிதி சங்கர் அழகாக இருக்கிறார் கலகலப்பாக நடிக்கிறார் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இவரது கதாபாத்திரமே படத்தை நன்றாக தூக்கி நிறுத்துகிறது. நாயகனை காட்டிலும் நாயகிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். நகைச்சுவை காட்சிகளுக்கு விக்கல்ஸ் விக்ரம் பொறுப்பேற்று இருக்கிறார். அதை ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார். மற்றபடி படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பூ, கருத்தம்மா புகழ் ராஜா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது அவர்கள் அனைவரும் அவரவர் வேலையை செய்திருக்கின்றனர். வக்கீலாக வரும் கல்கி கோச்சலின் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கான தேர்வு கல்கி அப்படியே அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். வக்கீல் கதாபாத்திரத்திற்கு சிறப்பான தேர்வை செய்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவருக்கும் ஆகாஷ் முரளிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி ஆங்காங்கே கலகலப்பை கூட்டி இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் ரகம் என்றாலும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் வழக்கம்போல். இந்தப் படத்திற்கு இவர் பக்கபலமாக இசையமைத்திருப்பது படத்தையும் கரை சேர்க்க உதவி செய்திருக்கிறது. கேமரூன் எரிக் ப்ரெசென் ஒளிப்பதிவில் ஃபாரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டம். அதேபோல் காதல் காட்சிகளையும் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார்.
படம் தொடங்கிய நிமிடத்தில் இருந்து வழக்கம் போல் விஷ்ணுவர்தன் படப்பாணியில் காதல் காட்சிகளாக விரிந்து போகப் போக இன்வெஸ்டிகேட்டிவ் திரளாக விரிந்து ரசிக்க வைக்க முயற்சி செய்த திரைப்படத்தில் இன்னமும் கூட கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஆனா முக்கியத்துவத்தை மெருகேற்றி இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக இந்த நேசிப்பாயா அனைவராலும் இன்னுமும் நேசிக்கப்பட்டு இருக்கும்.
நேசிப்பாயா - நேசிப்பாயா?