Skip to main content

ஓரினச்சேர்க்கை குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கும் இந்தப் படத்துக்கும் ஒரு சம்மந்தம்... வஞ்சகர் உலகம் - விமர்சனம்

Published on 08/09/2018 | Edited on 08/09/2018

முன்பெல்லாம் ஹாலிவுட் படங்களின் தாக்கம் தமிழ் படங்களில் தெரியும். இப்போது ஹாலிவுட்டைத் தாண்டி கொரியன், ஈரான் படங்களின் தாக்கமெல்லாம் கூட தமிழ் படங்களில் தெரிகிறது. இந்தத் தாக்கம் தமிழ் ரசிகர்களுக்கு பல புதிய அனுபவங்களைத் தருகிறது என்ற முறையில் நல்லதுதான். சில நேரங்களில் அந்த டெம்பிளேட் தமிழ் ரசிகர்களை சென்றடையாமல் போவதும் நடக்கிறது.

 

guru somasundaram vanjagar ulagam



ஒரு கொலையை சுற்றி நடக்கும் கேங்க்ஸ்டர் கதையை வித்தியாசமாக டார்க் திரில்லர் பாணியில் சொல்ல முயற்சி செய்துள்ள படம் இயக்குனர் மனோஜ் பீடாவின் 'வஞ்சகர் உலகம்'. நாயகி சாந்தினி தமிழரசன் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டில் பிணமாகக் கிடக்கிறார். போலீசார் எதிர் வீட்டில் வசிக்கும் குடிகார இளைஞன் சிபியை சந்தேகிக்கின்றனர். இன்னொருபுறம் சிபியின் நண்பரான விசாகன் இந்தக் கொலையை வைத்து போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் துரைராஜை பிடிக்க நினைக்கிறார். விசாகன் ஒரு பத்திரிகையாளர். அவருக்கும் போலீசுக்கும் சிபி மீதும், சாந்தினியின் கணவராக வரும் இயக்குனர் ஜெயபிரகாஷ் மீதும் மாறி மாறி சந்தேகம் ஏற்படுகிறது. ஜெயப்ரகாஷின் நண்பர் கேங்ஸ்டர் குரு சோமசுந்தரம், இந்தப் பிரச்சனையிலிருந்து தனது நண்பரைக் காப்பாற்ற களமிறங்குகிறார். கடத்தல் கும்பல் தலைவன் துரைராஜ் சிக்கினாரா, சாந்தினியை கொலை செய்தது யார், குரு சோமசுந்தரத்தின் பின்னணி என்ன, அவர் தன் நண்பன் இயக்குனர் ஜெயபிரகாஷை காப்பாற்றினாரா என்பதே வஞ்சகர் உலகம்.

 

vanjagar ulagam



ஹாலிவுட் இயக்குனர் குவெண்டின் டோரண்டினோ படங்களின் சாயலில் முயற்சி செய்யப்பட்டுள்ள இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு சைக்கோ கேங்ஸ்டராக சிறப்பாக நடித்துள்ளார். போதையில் சைக்கோத்தனமான செயல்களை செய்யும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும் அவர் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது. அறிமுக நடிகர் சிபி புவனச்சந்திரன் குடிகார இளைஞனாக மிக எதார்த்தமாக நடித்துள்ளார். போதைக்கடிமையான நிகழ்கால இளைஞர்களை கண்முன் நிறுத்தியுள்ளார். பத்திரிகையாளராக நடித்திருக்கும் விசாகனும் இவருக்குத் துணையாக பெண் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் அனிஷா ஆம்ப்ரோஸும்  தங்கள் பாத்திரங்களில் நன்றாகப் பொருந்தி நடித்துள்ளனர். நாயகி சாந்தினி தமிழரசன் கண்ணசைவில் பேசி கவர்ந்துள்ளார். போலீசாக வரும் அழகம் பெருமாள், 'பிச்சைக்காரன்' மூர்த்தி, வாசு விக்ரம் மற்றும் ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், ஹரீஷ் பரோடி என அனைவருமே தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

 

 


இயக்குனர் மனோஜ் பீதா, செமி நான் லீனியர் வகை திரைக்கதையில் படத்தை உருவாக்கியுள்ளார். சீராகச் சென்று கொண்டிருக்கும் திரைக்கதையில் அவ்வப்போது காட்சிகளை அடுத்தடுத்து நேர்த்தியாக இல்லாமல், முன்னுக்குப் பின்னாக மாற்றி அமைத்து வித்தியாச உணர்வை ஏற்படுத்துகிறார் இயக்குனர். இருந்தும் ஆங்காங்கே திரைக்கதையில் தென்படும் தேக்கங்கள் சற்று அயர்ச்சியை ஏற்படுத்தினாலும் மற்ற காட்சிகள் அடுத்தடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதால் சுவாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக சிபி கனவில் சாந்தினியை யார் கொலை செய்தது என்று காட்டும் காட்சியை படமாக்கிய விதம் உலக தரம். இந்த ஒரு காட்சிக்காகவே இயக்குனரை பாராட்டலாம்.

  vanjagar ulagam chandhini



இதேபோல் படத்திற்கு கதை வசனம் எழுதிய வினாயக்கும் தன் பணியை நேர்த்தியாக செய்துள்ளார்.  ஹாலிவுட் கேமராமேன் ரோட்ரிகோவும், அறிமுக ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமியும் ஒரு வித்தியாசமான படத்தை எடுக்கவேண்டுமென்ற இயக்குனரின் நோக்கத்துக்கு துணை நின்றிருக்கின்றனர். காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சிறந்த தரம். ஒரு காட்சியில் வரும் துப்பாக்கிச் சண்டையின் போது பின்னால் ஒலிக்கும் கர்நாடக சங்கீத பின்னணி இசைமூலம் சபாஷ் வாங்குகிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மேலும் படம் முழுவதிலும் இதுபோல் ஆங்காங்கே சர்பிரைஸ் பிஜிஎம் கொடுத்து கவர்ந்துள்ளார். இவர்களுடன் எடிட்டர் ஆண்டனியும் கைக்கோர்த்து படத்தின் மேக்கிங்கை அடுத்த லெவலுக்கு எடுத்துச்  சென்றுள்ளார். படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகளும், பிற்பாதியில் வரும் குழப்பங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன. கடைசியில் வரும் ட்விஸ்ட் ஆச்சர்யமூட்டி நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், படம் முழுவதிலும் ஆங்காங்கே ஏற்படும் தொய்வை ஒரு ட்விஸ்ட் சரி செய்யுமா?

 

 


ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதற்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்மந்தமென்றால், படத்தின் முக்கிய முடிச்சு அதை சார்ந்திருக்கிறது. வெறித்தனமாக, வித்தியாசனமான படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு வஞ்சகர் உலகம், ரசனையான உலகம்.

 

 

 

சார்ந்த செய்திகள்