'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்துக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை சில பிளாஷ் பேக் கதைகளோடு ஒன்றிணைத்து ஒரு பரவச அனுபவத்தை நம் கண் முன்னே காட்டியிருக்கும் படம் ஷாங் ச்சி. MCUவின் 25வது படமாக வெளிவந்துள்ள இப்படம் மூலம் கிழக்காசிய நாடுகளில் இருந்து ஒரு சூப்பர் ஹீரோ அறிமுகமாகியுள்ளார்.
நாயகன் ஷாங் ச்சியின் அப்பாவான டோனி லியுங் தன் கையில் அணிந்திருக்கும் 'டென் ரிங்ஸ்' கொண்டு இந்த உலகத்தை ஆள நினைக்கிறார். இதற்காக அவர் பல்வேறு அற்புத சக்திகள் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மர்ம கிராமத்தைக் கைப்பற்ற நினைக்கிறார். ஆனால், அவர் போன இடத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த லெய்கோ வு என்ற பெண்ணின் அழகில் மயங்கி காதல் கொள்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு உலகை ஆளும் எண்ணத்தைக் கைவிடுகிறார். இவர்களுக்கு ஷாங் ச்சி என்ற மகனும், மெங்கர் சாங் என்ற மகளும் பிறக்கிறார்கள். இவர்களின் அழகான வாழ்வில் திடீரென ஒரு இடி விழுகிறது. இதையடுத்து மீண்டும் டோனி லியுங் தன்னுடைய 'டென் ரிங்ஸ்' கொண்டு அந்த மர்ம கிராமத்தைப் பிடிக்க நினைக்க, அவருக்கு எதிராக அவரின் மகன் ஷாங் ச்சி, மகள் மெங்கர் சாங் திரும்புகின்றனர். இதன்பின்னர் நடக்கும் அதிரடி ஆக்சன் நிரம்பிய சாகச பயணமே 'ஷாங் சி' - தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்'.
ஹாங்காங் பட உலகின் பிரபல இயக்குநர் வாங் கார் வாய் படங்களின் ஆஸ்தான நடிகர் டோனி லியுங், ஷாங் ச்சியின் அப்பாவாகவும், மிரட்டல் வில்லனாகவும் நடிப்பில் அசத்தியுள்ளார். இவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளிலும் இவர் நடிப்பின் பல பரிமாணங்களை நம்மால் உணர முடியும். குறிப்பாக, காட்சியின் தன்மையையும், கதையின் ஓட்டத்தையும் தனது நடிப்பின் மூலமாகவே பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுகிறார் இவர். பாசமிகு அப்பா, அதிரவைக்கும் வீரன், குலைநடுங்கவைக்கும் அசுரன் என பல்வேறு உணர்ச்சிகளையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
ஷாங் ச்சி யாக வரும் சிமு லியு நடிப்பைக் காட்டிலும் ஆக்சன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார். இவருடைய தோழியாக வரும் நடிகை ஆவ்க்வாஃபினா காமெடி காட்சிகளில் பின்னி பெடலெடுத்துள்ளார். இவர் பேசும் பல வசனங்களும் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்கிக் கர ஒலியைக் கூட்டுகிறது. டோனி லியுங் மனைவியும், ஷாங் சியின் அம்மாவுமான ஃபலா சென் நடிப்பில் தைரியத்தையும், தன்நம்பிக்கையையும் கொடுக்கிறார். அதேசமயம் பார்வையாளர்களின் அனுதாபத்தையும் பெற்றுவிடுகிறார்.
மார்வெல் படங்களுக்கே உண்டான பிரமாண்டம், அழகு, வசீகரம், மெய்சிலிர்க்க வைக்கும் ஆக்சன் காட்சிகள், அதில் அழகாகப் பளிச்சிடும் செண்டிமெண்ட் என அத்தனை அம்சங்களும் இந்த 'ஷாங் ச்சி' படத்திலும் பிரமாண்டமாகப் பிரதிபலித்துள்ளது. எப்போதும் போல் பாரபட்சம் பார்க்காமல் பரபரக்கும் ஆக்சன் காட்சிகளில் எந்த குறையும் வைக்காமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது. குறிப்பாக, கிராபிக்ஸ் காட்சிகளில் மார்வெல் தங்களின் ஒவ்வொரு படங்களுக்கும் போடும் உழைப்பு இதிலும் பிரதிபலிக்கிறது. மாய உலகம், அதில் வரும் வித்தியாசமான மிருகங்கள், புதியதோர் கலாச்சாரம், மந்திரசக்திகள், வித்தியாசமான உடைகள் என ஒரு மர்மம் நிறைந்த வித்தியாசமான தேசத்தைப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தி மீண்டும் ஒருமுறை சபாஷ் வாங்கியுள்ளது மார்வெல்.
ஒரு நான்-லீனியர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் அயர்ச்சி தென்பட்டாலும், கிழக்காசிய தற்காப்புக் கலைகள் அடங்கிய ஆக்சன் காட்சிகள் அதனைச் சரி செய்து விடுகிறது. வழக்கம் போல் இந்த படத்திலும் மார்வெல்லின் புதிய ஹீரோவான ஷாங் ச்சி, அவெஞ்சர்களோடு இணையும் காட்சி ரசிக்கும்படியும், எதிர்பார்ப்புகளைத் தூண்டும்படியும் அமைந்துள்ளது. அதேபோல, ஆங்காங்கே வரும் அவெஞ்சர்களின் சர்ப்ரைஸ் எண்ட்ரிக்கள் ரசிகர்களுக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.
என்னதான் ஹாலிவுட் படங்கள் உலகளவில் பிரமாண்ட வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றாலும், அதே வரவேற்பு புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜெட் லீ ஆகியோரின் கிழக்காசிய ஆக்சன் படங்களுக்கும் கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த இரண்டு பட உலகும் தற்போது ஒன்றாகி, மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸில் இணைந்து மக்களை மகிழ்விக்க 'ஷாங் ச்சி' - தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்' படம் மூலம் தியேட்டர்களுக்கு வந்தடைந்துள்ளது.
'ஷாங் ச்சி' - தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்' - எப்போதும் போல் 'நோ டிஸப்பாய்ண்ட்மெண்ட்'!