Skip to main content

கமல், அஜித்தை இயக்கியவர்... ஆரவ்வை வைத்து எடுத்த படம் எப்படி? மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - விமர்சனம்

ia-Desktop ia-mobile

ஒரு இடைவெளிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மூன்று படங்கள் போதிய வரவேற்பு பெறாத நிலையில் அதையெல்லாம் சரிகட்டும் விதமாக வந்துள்ள இப்படம் எப்படி உள்ளது? 

 

marketraja

 

சரணின் இயக்கத்தில் வெளிவந்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலுக்கு பதிலாக ஒரு வளர்ந்து வரும் நாயகன் நடித்திருந்தால், அவருக்கு ஒரு முன் கதை இருந்திருந்தால், அவருக்கும் மருத்துவ கல்லூரி டீனின் மகளுக்கும் காதல் இருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதுவே இந்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என்ன இப்படத்தில் கொஞ்சம் மாறுதலாக ஒரு பேயும் இவர்களது காதலுக்கு உள்ளே புகுந்து விளையாடியிருக்கிறது.

 

படத்தில் கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் வடசென்னை தாதாவாக வருகிறார் ஆரவ். இவருக்கு வழக்கம்போல் எதிரிகளால் பல்வேறு ஆபத்துக்கள். இவரும் வழக்கம்போல் அந்த ஆபத்துக்களை அடித்து துவம்சம் செய்து விடுகிறார். ஆரவ் மேல் மருத்துவக் கல்லூரி டீனின் மகள் காவ்யா தப்பருக்கு ஒருதலைக் காதல். அதே காவ்யா தப்பர் மேல் எதற்கெடுத்தாலும் பயந்து சாகும் மருத்துவ கல்லூரி மாணவரான விஹாருக்கு ஒருதலைக் காதல். இதற்கிடையே ஆரவ்விற்கும் அவரது எதிரிக்கும் நடக்கும் மோதலில் தவறுதலாக விஹார் கொல்லப்படுகிறார். பின்னர் அவரது ஆவி ஆரவ்வை பிடித்துக் கொள்கிறது. மிகவும் வீரமான ஆண்மகனாக இருக்கும் ஆரவ்விற்கு பேய் பிடித்தவுடன் பயந்தாங்கோலியாக மாறிவிடுகிறார். இதையடுத்து இவரை கொல்லத் துடிக்கும் எதிரிகளிடமிருந்து இவர் எப்படி சமாளித்து தப்பித்தார், பயந்தாங்கோலி கல்லூரி மாணவருடைய காதலும், நாயகி காவ்யா தப்பருடைய காதலும் என்னவானது என்பதே மீதிக்கதை.

 

marketraja

 

பிக்பாஸுக்குப் பிறகு ஆரவ் நாயகனாக நடித்து வெளியான முதல் படம். ஆனால் நடிப்பில் அவருக்கு இது இரண்டாவது படம் என்பதால் பாஸ்மார்க் வாங்கும் அளவுக்கு நடித்துள்ளார். முதல் பாதி தாதா கேரக்டரை காட்டிலும் இரண்டாம் பாதியில் வரும் பயந்தாங்கோலி கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். இருந்தும் உடல் மொழி மற்றும் முக பாவனைகளில்  அவர் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம். சம்பிரதாய நாயகியாக வரும் காவ்யா தப்பர் கொடுத்த வேலையை செய்துள்ளார். இருந்தும் இவரது காட்சிகளில் வரும் வசன உச்சரிப்பில் உதட்டசைவு பொருந்திப் போகாதது சற்று சங்கடம் அளிக்கிறது. பயந்தாங்கோலி கல்லூரி மாணவராக வரும் விஹார் கவனம் பெற்றுள்ளார். படத்தில் டீனாக வரும் நாசர், மாற்றுத்திறனாளி ரோஹிணி, ரவுடி ஆதித்யா, மந்திரி சியாஜி ஷிண்டே மற்றும் சாம்ஸ், நிகிஷா பட்டேல், ஹரிஷ் பெரடி, மதன்பாப், தேவதர்ஷினி, முனீஸ்காந்த் ஆகியோர் சரண் படத்தில் வரும் வழக்கமான கேரக்டர்களை அப்படியே பிரதிபலித்து சிறப்பாக நடித்துள்ளனர்.

 

இதில் குறிப்பாக லேடி ரவுடியாக வரும் ராதிகா சரத்குமார் கேரக்டர் படத்திற்கு அவசியமா என தோன்ற வைக்கிறது. ஒரு பெரிய நடிகையை பட புரமோஷன் களிலும், போஸ்டர்களிலும் பிரதானமாகக் காண்பித்துவிட்டு படத்தில் அவருக்கு உண்டான முக்கியத்துவம் ஒரு சதவீதம் கூட கொடுக்காமல் வீணடித்துள்ளது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. அதுவும் அவர் வரும் காட்சிகள் எல்லாம் முகம் சுளிக்க வைப்பது மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

marketraja

 

சரண் படத்தின் ஸ்பெஷல்கள் என சில விஷயங்கள் உண்டு. காதல் மன்னன் படத்தில் மேன்சன், அமர்க்களத்தில் திரையரங்கு, வசூல்ராஜாவில் மருத்துவமனை என ஒரு இடத்தை சுற்றி படங்கள் நகரும். அந்த இடத்துக்கான அனைத்து சுவாரஸ்யங்களையும் சிறப்பாகக் காட்டியிருப்பார். அதுபோல இந்தப் படத்திலும்  ஆரவ்வின் வீட்டை சுற்றி கதை நகர்கிறது. அதுவும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வரும் அதே காட்சி அமைப்புகள், வசன அமைப்புகள், அதேபோல் ஒரு மருத்துவமனை, அதேபோன்ற கேரக்டர்கள், அதேபோன்ற ரவுடி ஏரியாக்கள் என இப்படத்தின் கதையை தவிர்த்து மற்ற விஷயங்களில்  எந்த ஒரு புதுமையும் செய்யாமல் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சரண். பத்து ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு படம் ஓகே. ஆனால் இப்போதுள்ள ட்ரெண்டிற்கு, ரசனைக்கு இது பொருந்துமா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. இருந்தும் சரண் இயக்கிய கடைசி இரண்டு மூன்று படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இப்படம் அவையெல்லாம் விட சற்று ரசிக்கும்படி வந்திருக்கிறது. ஆனால், அமர்க்களம், வசூல் ராஜா என தரமான பொழுதுபோக்குப் படங்கள் எடுத்தவரின் படத்தை அந்தக் கடைசி படங்களுடன் ஒப்பிட்டு மகிழ முடியவில்லை.  

 

சைமன் கே கிங் பின்னணி இசை படத்திற்கு சற்று வலு சேர்த்துள்ளது. கே.வி.குகன் ஒளிப்பதிவு ஓகே. 

 

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - பல அரியர்களோடு இருக்கிறார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்