நீண்ட நாட்களாகவே சினிமாவில் மீண்டும் கம்பாக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடிகர் ஜீவா இந்த தடவை ஒரு வித்தியாசமான திரில்லர் படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். பொதுவாக த்ரில்லர் படங்கள் என்றாலே மர்டர் மிஸ்டரி அல்லது பேய் படம் போல பயமுறுத்தும் படங்களாகவே அமையும் ஆனால் இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு குவாண்டம் சயின்ஸ் மையமாக வைத்துக் கொண்டு அதன் மூலம் படத்தை திரில்லர் ஆக கொடுத்து இருக்கின்றனர். அது பார்ப்பவர்களைக் கவர்ந்ததா, இல்லையா? என்பதைப் பார்ப்போம்...
ஜீவா பிரியா பவானி சங்கர் ஆகியோர் கணவன் மனைவி. இருவரும் ஒரு சிறிய ஹாலிடேவுக்காக தாங்கள் பீச்சோரம் வாங்கிய வில்லாவுக்கு செல்கின்றனர். அந்த கடற்கரை வில்லா குடியிருப்பில் இவர்களைத் தவிர வேறு யாரும் இன்னும் குடி போகவில்லை. அந்த இடமே அமானுஷ்யமாக அமைதியாகக் காணப்படுகிறது. இது அப்படி இருக்க அன்று இரவு அவர்கள் தங்கும் அந்த விடுதியில் திடீரென எதிர் வீட்டில் விளக்குகள் எறியப்பட்டு யாரோ இருப்பது போன்று தெரிகிறது. இதைக் கண்ட பிரியா பவானி சங்கர் ஜீவா ஆகியோர் அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று சென்று பார்க்கும் பொழுது அதிர்ச்சிகரமாக அதே வீட்டில் மற்றொரு ஜீவா பிரியா பவானி சங்கர் இருக்கின்றனர். அது எப்படி தங்கள் போலவே இரண்டு நபர்கள் எதிர் வீட்டில் இருக்க முடியும்? அவர்கள் யார்? அந்த குடியிருப்பில் நடக்கும் அமானுஷ்யம் என்ன? என்பதே பிளாக் படத்தின் மீதி கதை.
வெறும் இரண்டு நபர்களை மட்டுமே மையமாக வைத்துக் கொண்டு 2 மணி நேரப் படத்தைப் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கே ஜி பாலசுப்பிரமணி. கொலை கொள்ளை பேய் என திரில்லர் படங்களுக்கே உரித்தான விஷயங்களைத் தவிர்த்துவிட்டு ஒரு வீடு அதனுள் இருக்கும் இரண்டு நபர்கள் என மிகவும் குறுகிய வட்டத்துக்குள் குவாண்டம் சயின்ஸ் உட்புகுத்தி அதன் மூலம் ஒரு வித்தியாசமான திரில்லர் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். கொஞ்சம் பிசகினாலும் குழப்பம் ஏற்படக்கூடிய இந்த கதையைத் தனது நேர்த்தியான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு அயற்சி ஏற்படாதவாறு சாமர்த்தியமாகக் கொடுத்து இருக்கிறார். ஆனால் இந்த படம் பொது ஜன ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்றால் சற்று சந்தேகமே. ஆனாலும் உலக சினிமா மற்றும் ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு தமிழில் நல்ல ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. குறிப்பாகப் படத்தின் மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
நாயகன் ஜீவா வழக்கம்போல் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கதை தேர்வில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் பொறுமையாகவும் நேர்த்தியான ஒரு படத்தைத் தேர்வு செய்து நடித்து அதன் மூலம் கம்பை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்கு இந்த படம் ஓரளவுக்குப் பலனைக் கொடுத்திருக்கிறது. இவருடன் மனைவியாக நடித்திருக்கும் பிரியா பாவாணி சங்கர் வழக்கமான நாயகியாக இல்லாமல் கதைக்கு மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாகவே மாறி ரசிக்க வைத்திருக்கிறார். கதை ஓட்டத்தின் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் இவர் ஜீவாவுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். எந்தெந்த இடங்களில் எவ்வளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதைச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர்த்து படத்தில் விவேக் பிரசன்னா, சாரா, சுயம் சித்தா, யோகி ஜேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அவர்கள் படத்தில் பெரிதாக வரவில்லை என்றாலும் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துவிட்டுச் சென்று இருக்கின்றனர். எந்தெந்த கட்சிக்குத் திருப்பும் மனை தேவையோ அந்தந்த கட்சிக்கு அவர்கள் வந்து அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்துவிட்டுச் சென்று இருக்கின்றனர். மற்றபடி படத்தில் இவர்களுக்கு அதிக வேலை இல்லை.
படம் ஒரே இரவில் நடக்கும் படி இருப்பதால் பினாய் ஒளிப்பதிவில் பங்களா மற்றும் பிளாக் ஹோல் சம்பந்தப்பட்ட காட்சிகள் திகிலாகச் சிறப்பான காட்சி அமைப்புகளால் நன்றாக இருக்கிறது. குறிப்பாக எங்கெங்கு திகில் ஏற்படும்படியான காட்சிகள் இருக்கிறதோ அதை எல்லாம் தனது சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் என் மெருகேற்றி இருக்கிறார். எப்பொழுதும் இரைச்சலான சத்தத்தையே கொடுத்து கடுப்பேற்றும் சாம் சி எஸ் இந்த படத்தில் மென்மையான இசையை பெரும் பங்கு கொடுத்து மீண்டும் கவனம் பெற்று இருக்கிறார். இவரது பின்னணி இசை பலத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது. இவர் இதே போல் அதிக சத்தம் இல்லாமல் இனிவரும் காலத்தில் இசையமைக்கும் பட்சத்தில் நல்ல பெயர் வாங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
பொதுவான த்ரில்லர் படமாக இப்படத்தைப் பார்க்கும் பட்சத்தில் பொது ரசிகர்களுக்கு இது ஒரு வழக்கமான படமாகவே அமைந்திருக்கிறது. ஆனால் உலக சினிமா ரசிகர்களுக்கும், ஹாலிவுட் பட ரசிகர்களுக்கும் இந்த படம் அவர்களுக்கு பிடித்தமான ஒரு தமிழில் தரமான திர்லர் படம் பார்த்து அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.
பிளாக் - நல்ல முயற்சி!