Skip to main content

மேட் இன் ஜப்பான் குவாலிட்டியா? - ‘ஜப்பான்’ விமர்சனம்!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

japan movie review

 

பொன்னியின் செல்வன் 1 & 2, சர்தார் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து வெற்றி நாயகனாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் கார்த்தி இந்த முறை கலை படங்கள் மூலம் கவனம் ஈர்க்க ராஜு முருகனுடன் கைகோர்த்து ஒரு அதிரடி கமர்சியல் நிறைந்த ஜப்பான் படத்தோடு இந்த தீபாவளி ரேசில் குதித்துள்ளார். இந்த ரேஸில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா?

 

கோயம்புத்தூரில் மிகப்பெரிய நகை கடை ஒன்றின் சுவரில் துளையிட்டு 200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்தக் கொள்ளை சம்பவத்தை மிகப்பெரிய கொள்ளைக்காரனான ஜப்பான் கார்த்திதான் அரங்கேற்றுகிறார் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் சுற்றிக்கொண்டு ஆங்காங்கே கொள்ளையடித்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கோடீஸ்வர திருடன் ஜப்பான் கார்த்தியை பிடிக்க போலீசார் விஜய் மில்டன் தலைமையில் தனிப்படை அமைக்கின்றனர். போலீசார் ஒரு பக்கம் ஜப்பான் கார்த்தியை வலை வீசித் தேட, இன்னொரு பக்கம் ஜப்பான் கார்த்தி போலீசாரிடம் இருந்து தன் காதலி அனு இமானுவேலுடன் தப்பித்து ஒவ்வொரு இடமாக புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார். இறுதியில் அந்த நகைக் கடையை கொள்ளையடித்தது யார்? ஜப்பான் கார்த்தி போலீசாரிடம் பிடிபட்டாரா, இல்லையா? என்பதே இந்தப் படத்தின் மீதிக் கதை.

 

தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ராஜுமுருகன் இந்த முறை கமர்சியல் பார்முலாவில் ஒரு படத்தை இயக்கி அதன் மூலம் முன்னணி கமர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைய ஜப்பான் மூலம் முயற்சி செய்திருக்கிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்றால் சந்தேகமே!

 

படத்தின் முதல் பாதி யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் மெதுவாக ஆரம்பித்து போகப் போக கொஞ்சம் கொஞ்சம் வேகம் எடுத்துள்ளது. பின்பு இதை சரிகட்டும் விதமாக இரண்டாம் பாதி அமைந்து சற்றே நமக்கு ஆறுதல் அளித்துள்ளது. படத்தின் நாயகன் ஒரு மிகப்பெரிய திருடன் என்று வெறும் வாய் வார்த்தைகளால் மட்டுமே கூறியிருக்கும் இயக்குநர் அதற்கான எந்த ஒரு செயல்பாட்டையும் படம் முழுவதிலும் ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. அதுவே படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் கார்த்தி இந்த படத்தில் வித்தியாசமாக இழுத்து இழுத்து பேசும் வசன உச்சரிப்பு ஆரம்பத்தில் சற்று அயர்ச்சியைக் கொடுத்தாலும் போகப் போக அதுவே நமக்கு பழகி ரசிக்கும்படி மாறி விடுகிறது. குறிப்பாக படத்தில் ஆங்காங்கே நிகழ் கால அவலங்களை கண்டிக்கும் வகையில் வரும் பஞ்ச் வசனங்கள் சிறப்பாக அமைந்து ரசிக்க வைத்துள்ளனர்.

 

ஒரு அதிரடியான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர், ஏனோ திரைக்கதையில் அந்த அதிரடியை காட்டாமல் மிகவும் தொய்வாகவும் அதே சமயம் பல்வேறு லாஜிக் மீறல்களோடும் படத்தை உருவாக்கியுள்ளார். படத்தில் நாயகி கதாபாத்திரமும் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக அமையவில்லை. அதேபோல் நாயகன் கார்த்திக்கு ஒரு மிகப்பெரிய வியாதி இருப்பதுபோல் காட்டியிருப்பது படத்திற்கு அது எந்த வகையில் உதவி புரிந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தும் கார்த்தியின் ஒன் மேன் ஷோ மற்றும் அவரது ஒன்லைன் காமெடிகள் படத்தை தனியாளாக தூக்கி நிறுத்த முயற்சி செய்துள்ளது. அதேபோல் தனக்கு என்ன வருமோ அதையே ராஜுமுருகன் செய்திருக்கலாம்.

 

நாயகன் கார்த்தி எப்பொழுதும் போல் தனது உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இந்த படத்திலும் நடித்திருக்கிறார். அது ஆரம்பத்தில் சில இடங்களில் நமக்கு எரிச்சல் ஏற்படுத்தி இருந்தாலும், போகப் போக பல இடங்களில் அதுவே பிளஸ் ஆக மாறி நம்மை ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் அவர் பல்லை கடித்துக்கொண்டு பேசும் பஞ்ச் வசனங்களும் நிகழ்கால அரசியலையும், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் நையாண்டி செய்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் அனு இமானுவேல். அவருக்கு பெரிதாக வேலை இல்லை. கார்த்தியுடன் படம் முழுவதும் பயணிக்கும்படியான கேரக்டரில் வரும் வாகை சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனம் பெற்றிருக்கிறார்.

 

கார்த்தியின் நண்பராகவும் மற்றும் வில்லனாகவும் வரும் ஜித்தன் ரமேஷ் அவருக்கான வேலையை செய்திருக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் போலீசாக வருகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் கே.எஸ். ரவிக்குமார் மனதில் பதிகிறார். மிரட்டல் போலீசாக வரும் விஜய் மில்டன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகவே செய்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் படம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக ஜப்பான் சம்பந்தப்பட்ட காட்சிகளும் பாடல் காட்சிகளும் மிக பிரமாண்டமாக காட்சிப்படுத்தி மிரட்டி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே.

 

தன்னுடைய பலமான காதல், செண்டிமெண்ட், சமூக அக்கறை கொண்ட தரமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜுமுருகன் அதை புறந்தள்ளி மூட்டை கட்டிவிட்டு தற்போது ட்ரெண்டில் இருக்கும் அதிரடியான கமர்சியல் ஃபார்முலா கொண்ட சினிமா என்ற கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்து அதில் தோல்வியை தழுவி இருக்கிறார்.

 

ஜப்பான் - மேட் இன் ஓல்ட் இந்தியா!

 


 

சார்ந்த செய்திகள்