Skip to main content

பா.ரஞ்சித்திடம் இருந்து இன்னொரு குண்டு!  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு - விமர்சனம் 

Published on 07/12/2019 | Edited on 08/12/2019

சினிமா என்பது எல்லோருக்கும் ஒன்றாக இருப்பது இல்லை. சிலருக்கு அது பொழுதுபோக்கு, சிலருக்கு அது வியாபாரம், சிலருக்குக் கலை, சிலருக்கு ஆயுதம். பா.ரஞ்சித்திற்கு சினிமா, தான் பேச நினைத்த அரசியலை பேச, பேசப்படாத குரலை ஒலிக்க, திறக்கப்படாத கதவுகளை, காதுகளை திறக்கும் ஆயுதமாகத்தான் இருக்கிறது. தான் இயக்கிய ஒவ்வொரு படத்தையும் அப்படிப்பட்ட ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய ரஞ்சித், தான் தயாரிக்கும் படங்களையும் அவ்வாறே உருவாக்குகிறார். சரி, தவறு, ஆதரவு, எதிர்ப்பு அனைத்திற்கும் இடையே தனது 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' மூலம் அதே அரசியல் பேசும் பிற இயக்குனர்களையும் தன் வழித்தோன்றல்களாக உருவாக்குகிறார். 'பரியேறும் பெருமாள்' பெற்ற வெற்றி, வரவேற்பை தொடர்ந்து வந்திருக்கிறது அதியன் ஆதிரை இயக்கியுள்ள 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'.

 

dhinesh



இரண்டாம் உலகப் போருக்காகத் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆயுதங்கள், குண்டுகளை முறையாக அழிக்கிறோம் என்று பெரும் தொகைக்கு டெண்டர் எடுக்கும் இரண்டு ஊழல் நிறுவனங்கள் அவற்றை கடலின் ஆழமான பகுதிகளில் கொட்டுகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை அவ்வப்போது பல்வேறு ஊர்களில் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கும் குண்டுகள் வெடிப்பதில் உயிர்கள் பலியாகின்றன. ஆனால், அரசுகளாலும் போலீசாலும் உண்மை மறைக்கப்பட்டு, இவை வேறு விதமான விபத்துகளாக செய்திகளில் வெளிவருகின்றன. இப்படி ஒரு குண்டு, சென்னை மாமல்லபுரத்தில் கரை ஒதுங்குகிறது. அந்த குண்டு, பின்னர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திருடப்பட்டு பழைய இரும்பு, உலோகத்தை வாங்கி விற்கும் கடையில் லாரி ட்ரைவராகப் பணிபுரியும் செல்வத்தின் (தினேஷ்) லாரிக்கு வந்து சேர்கிறது. செல்வம், கடும் உழைப்பை முதலாளிக்குக் கொடுத்தும் அதற்கான வருமானமில்லாத... அவ்வப்போது அதை எதிர்த்து கேள்வி கேட்டு, முதலாளியின் கோபத்தை சம்பாதித்துக்கொண்ட... சொந்தமாக ஒரு லாரி வாங்கி அந்த முதலாளியின் முன் ஓட்டவேண்டுமென்ற தனது தந்தையின் கனவை சுமந்து திரிகிற... 'என் மனசுக்குப் பிடிச்ச ட்ரைவர் வேலையைத்தான் நான் செய்வேன், ஆனா உன்ன செம்மயா வச்சுப்பேன்' என்று சிட்டுவை (ஆனந்தி) காதல் செய்கிற... ஒரு இளைஞன். சிட்டு, தங்கள் வீட்டுப்பெண் காதலை மறக்க பூசை செய்து அந்தத் தண்ணியை குடிக்கச் செய்யும் குடும்பத்தில் பிறந்த... தொடர்ந்து பேச்சைக் கேட்காத தங்கையை அழைத்துச் சென்று ஆணவக் கொலை செய்யத் தயங்காத அண்ணனை கொண்ட... 'எங்க வீட்ல இருந்து எப்படி தப்பிச்சு வர்றதுன்னு எனக்குத் தெரியும், நீ ஒன்னும் கூட்டிப்போக வேண்டாம் என்ற தைரியம் கொண்ட... காதலில் உறுதியாக நிற்கும் டீச்சர் வேலைக்குப் படித்த இளம் பெண். ஒரு பக்கம் குண்டு... ஒரு பக்கம் சிட்டு... குண்டுக்காகத் துரத்தும் போலீஸ், சிட்டுவுக்காகத் துரத்தும் அவளது அண்ணன் என இரண்டு பிரச்னைகளில் ஒரே நேரத்தில் சிக்கியிருக்கும் செல்வம் என்னவாகிறான், குண்டு என்னவாகிறது என்பதே 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'.

 

anandhi



போர்களின் பின்னணியையும் அவை சாதாரண மக்கள் மீது நிகழ்த்தும் வன்முறையையும் விளக்கி ஒரு பக்கம் உலக அரசியலை பேசும் படம், பழைய இரும்புக் கடையில் முதலாளியின் உறிஞ்சல், தொழிலாளர்களின் வாழ்க்கை, கனவு, கண்ணீர், நகைச்சுவை என இன்னொரு பக்கம் மறு எல்லையை தொடுகிறது. அதிகம் பார்க்காத பழைய இரும்புக்கடை வாழ்க்கையை உண்மைக்கு மிக அருகில் காட்டி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. இரும்புக்கடை, பழைய லாரி, பாண்டிச்சேரி ஃபேக்டரி என எந்தத் தளத்திலும் சினிமாவுக்கான பூச்சு இல்லாமல் அப்படியே படமாகியிருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம். இப்படி இரு விதமான தீவிரமான விஷயங்களை பேசும் படத்தை தினேஷ் - ’முனீஷ்காந்த்’ ராமதாஸ் காமெடி, குண்டு என்ன செய்யுமோ என்ற சஸ்பென்ஸ் இரண்டும் சேர்த்து ஜனரஞ்சகமாகக் கொடுத்ததில் வெற்றி பெறுகிறார் இயக்குனர். அடிமைப்பட்டுக் கிடக்கும் பழைய இரும்புக் கடை தொழிலாளி அணிந்திருக்கும் சேகுவேரா டி-சர்ட், குண்டுடன் சேர்ந்து கரையொதுங்கும் குளிர்பான பாட்டில் என குறியீடுகளும் குறையில்லாமல் இருக்கின்றன. "இந்த நாட்டு குண்டு இங்க வெடிக்காது, அந்த நாட்டு குண்டு அங்க வெடிக்காது, இல்ல?", உள்பட பல வசனங்கள் எளிமையாகவும் வலிமையாகவும் இருக்கின்றன. ஒரு காட்சியில் தனது முதலாளிக்கு ஃபோன் போடும் ராமதாஸ், "ஹலோ, நான் சுப்பையா பேசுறேன்" என தனது உண்மையான பெயரை சொல்ல, முதலில் யாரென தெரியாமல் குழம்பும் மாரிமுத்து, பிறகு "ஏன்... 'பஞ்சர்'னு உன் பேரை சொல்ல மாட்டியா?" என்று திட்டுகிறார். இது காமெடியாகத் தெரிந்தாலும், உள்ளே ஆயிரம் கதையை சொல்கிறது, தங்கள் சொந்த பெயர்களை கூட வைத்துக்கொள்ள முடியாத மக்கள் இருந்ததை, இருப்பதை எளிமையாக சொல்லிச் செல்கிறது இந்தக் காட்சி. இப்படி படத்தில் நேர்மறை பண்புகள் நிறைய.

 

muneeshkanth marimuthu



"உனக்கும் எனக்குமாடா பிரச்னை? நம்ம ரெண்டு பேரையும் கொல்ல ஒருத்தன் வந்துருக்கான்டா" என உலக அளவிலான அரசியலையும் உள்ளூரில் நடக்கும் சாதிப் பிரச்னைகளையும் ஒப்பிடும் வசனம் ஒன்று உள்ளது. இதுதான் படத்தின் அணுகுமுறையாகவும் இருக்கிறது. ஆனால், இந்த முயற்சி படத்தின் குறையாக மாறிவிட்டது. அந்த குண்டு, அது என்னவாகுமோ எங்கு வெடிக்குமோ என்ற பயம், அந்த குண்டை உலகுக்குக் காட்டி அதன் மூலம் உலகுக்கு உண்மையை சொல்ல முயலும் பெண் போராளி, குண்டை மறைக்க எது வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம் என துரத்தும் போலீஸ் - கார்ப்பரேட் கூட்டணி என முக்கிய கதையே சுவாரசியத்திற்கு போதுமானதாக இருக்க, பிற விஷயங்கள் சேர்க்கப்பட்டது கூடுதல் சுமையாகவும் விறுவிறுப்பை குறைப்பதாகவும் அமைந்துள்ளது. பெண் போராளி, பத்திரிகையாளர், JNU முன்னாள் மாணவி என்ற பரிமாணங்களுடன் வரும் ரித்விகா நடித்துள்ள பாத்திரம் தைரியமான, ஆக்டிவான பெண்ணாக இருந்தாலும் சில இடங்களில் சாத்தியங்களை மீறி குண்டை துரத்திக்கொண்டே பயணிப்பதும் நம்பகத்தன்மையை குறைக்கிறது. இவ்வளவு பெரிய விஷயம் நடந்து கொண்டிருக்கையில் அதில் அரசு, காவல்துறை, கார்ப்பரேட் என பெரிய அளவில் அதிர்வில்லாமல் சிறிய குழுக்களின் துரத்தல், தேடலுடன் முடிவதும் கேள்விகளை ஏற்படுத்துகிறது.


தினேஷ்... கதாபாத்திரத்துக்காக எதையும், எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருந்து சிறப்பாக நடித்துள்ளார் தினேஷ். ஆனந்தி, தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள வெள்ளந்தியான அழகி. நடிப்பிலும் குறையில்லை. படத்தில் நம்மை பெரிதும் கவர்வது ’முனீஷ்காந்த்’ ராமதாஸ். சிறு எதிர்மறை குணமும் கொண்ட நகைச்சுவையான பாத்திரத்தில் பின்னியெடுக்கிறார். இவ்வளவு சீரியஸான படத்தில் இவர் தரும் காமெடி நிவாரணம் படத்திற்கு பெரும் பலம். ரித்விகா, மாரிமுத்து, லிஜிஷ், சார்லஸ் வினோத் என நடிகர்களின் பங்களிப்பு மிக சிறப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த குண்டு காட்டப்படும்போது டென்மாவின் பின்னணி இசை நமக்கு திகிலை ஏற்படுத்துகிறது. பாடல்களும் களத்துக்கான நேட்டிவிட்டியுடனும் தாக்கத்துடனும் இருக்கின்றன. டென்மா, முதல் படத்திலேயே தனது இசையால் கவனத்தை பெறுகிறார். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும் தேவையான அளவில் பயன்படுத்தி சிறப்பான விசுவல்களை உருவாக்கியிருக்கிறது. பழைய இரும்புக் கடை, அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை, இவற்றை பதிவு செய்துள்ள 'நிலமெலாம்' பாடலில் செல்வாவின் படத்தொகுப்பு மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறது என்றே சொல்லலாம். ராமலிங்கத்தின் கலை மிக நேர்த்தியாக, நிஜமாக அந்த உலகத்தை உண்டாகியிருக்கிறது. ஆண்டனியின் ஒலி வடிவமைப்பும் படத்தின் உண்மைத்தன்மைக்கு உதவியிருக்கிறது.

மிகப் பெரிய அளவில் வெடிக்காவிட்டாலும் அதியன் ஆதிரையின் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் தயாரிப்பில், இந்தப் படம் இன்னொரு குண்டாகத்தான் வந்திருக்கிறது. இதன் வெடிப்பில் புதிய விஷயங்கள் வெளிவந்திருக்கிறது.                                                          
         

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!