Skip to main content

'ஹிப் ஹாப்' ஆதிக்கு என்ன ஒரு தைரியம்! நான் சிரித்தால் - விமர்சனம்

Published on 15/02/2020 | Edited on 16/02/2020

'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' வெற்றிகள் தந்த உற்சாகத்தோடு 'நான் சிரித்தால்...' என வந்திருக்கிறார் நாயகன் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி. பள்ளி, கல்லூரி மாணவர்களை அவர் கவர்ந்திருக்கிறார் என்பதை அவரது என்ட்ரியிலும் பாடல்களின்போதும் அரங்கில் எழும் உற்சாகத்தில் உணர முடிகிறது. 'நான் சிரித்தால்' தொடங்கும்போது இருக்கும் அந்த உற்சாகம் படம் முடியும் வரை தொடர்கிறதா?

 

hihop aadhi



எஞ்சினியரிங் படிப்பை அரியர்களுடன் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஆதியின் வாழ்வில் திடீரென தொடர் சோதனைகள். அலுவலகத்தில் பிரச்னை, காதலில் பிரச்னை என பிரச்னைகள் இறுக்க மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆதிக்கு சோகம், அதிர்ச்சி, பதற்றம் என எதிர்மறை உணர்வுகளுக்கு ஆளாகும்போது சிரிக்கும் நோய் (nervous laughter) வருகிறது. தனக்கு சோகம் நேர்ந்தாலோ, யாருக்காகவாவது பரிதாபப்பட்டாலோ அழுவதற்கு பதிலாக சிரிக்கத் தொடங்குகிறார் ஆதி. இதனால், பிரச்னைகள் மேலும் பெரிதாகின்றன. இதற்கிடையே சென்னையின் இரு பெரும் காமெடி ரௌடிகளுக்கு இடையிலான பகையில் தெரியாமல் மாட்டிக்கொள்கிறார். ஆதியின் பிரச்னைகள் முடிந்ததா, காதல் வென்றதா என்பதே இயக்குனர் ராணாவின் 'நான் சிரித்தால்'.

ராணா, சுந்தர்.சியின் சிஷ்யர் போல படம் எடுத்திருக்கிறார். காமெடி ரௌடிகள், ஆள் மாறாட்டம், கூச்சல் குழப்பம், அடிதடி காமெடி, இவர் பறந்து அவர் மேல் விழுவது, அவர் விழுந்து இவர் அடிபடுவது என பெரும்பாலான காமெடிகள் சுந்தர்.சி டைப் காமெடிகள். 'அவன் நல்லவன்', 'ஊருக்கு ஒரு பிரச்னைன்னா தானா போய் நின்னு மாட்டிக்குவான்', அலுவலகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான பேச்சு என ஆதிக்கு இமேஜ் பூஸ்ட் கொடுத்து எழுதியுள்ளார் ராணா. அழுக வேண்டிய, கோபப்பட வேண்டிய இடத்தில் சிரிக்கும் நோய் என்ற சுவாரசியமான களத்தை எடுத்துக்கொண்டவர் அதில் இன்னும் சுவாரசியமான, நகைச்சுவையான காட்சிகளை உருவாகியிருக்கலாம். சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகும் 'சிரிப்பு' காமெடி தொடர்ந்து பார்க்க அயர்ச்சி தருகிறது. தல - தளபதி ரசிகர்களிடம் ஆதி மாட்டிக்கொள்ளும் காட்சிகள் உண்மையில் 'கலகல'. அதுபோல மேலும் பல காட்சிகளை எதிர்பார்க்கும் நமக்கு சற்றே ஏமாற்றம்.

 

 

aiswarya menon



ஆதி, 'துறுதுறு சுறுசுறு' இளைஞனாக வழக்கம் போல கலக்குகிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாகப் பொறுப்பேற்று ஹெலிகாப்டர் மாப்பிள்ளை கேட்கும் பெண்கள் உள்பட அத்தனை 'அநீதி'களுக்கு எதிராகவும் கேள்வி கேட்கிறார். ஆனால், நடிப்பில் நுண்ணுணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் இன்னும் பயிற்சி, அனுபவம் தேவைப்படுகிறது போல. 'பாட்ஷா' டைப்பில் வைக்கப்பட்டுள்ள அந்த இடைவேளை காட்சி காமெடிதான் என்றாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையும் திட்டமும் தெரிகிறது. பாடல்களில் ஆதியின் உற்சாகம் தியேட்டரிலும் தெரிகிறது. 'எனக்கு பிரேக்-அப்பு' பாடல் இளைஞர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. பொறியியல் படிப்பு குறித்த கிண்டலும் அவநம்பிக்கையும் தொடர்ந்து ஆதி படங்களில் வைக்கப்படுகிறதோ என்று யோசிக்க வைக்கின்றன சில காட்சிகளும் வசனங்களும்.

 

 

shara munees



கே.எஸ்.ரவிக்குமார், ரவி மரியா, 'படவா' கோபி, முனீஷ்காந்த், ஷாரா, ராஜ்மோகன், 'எருமசாணி' விஜய் என நடிகர்கள் யாரும் குறை சொல்ல வைக்கவில்லை. ஆனால், அவர்களின் பாத்திரங்களில் நம்மை கவர்வது 'படவா' கோபி உள்ளிட்ட வெகு சிலதான். யோகி பாபு கடைசியில் என்ட்ரி கொடுத்து பத்துக்கு ஐந்து என்ற கணக்கில் சிரிக்க வைக்கிறார். நாயகி ஐஸ்வர்யா மேனன், அழகாக வந்து செல்வதற்கும் 'பிரேக்-அப்' பாடலுக்கும் பயன்படுகிறார். 'பிக்பாஸ்' ஜூலியை கிண்டல் செய்வதற்கென்றே இந்தப் பாத்திரம் கொடுக்கப்பட்டதுபோல. அவரது சொல், பல் எல்லாவற்றையும் நகைச்சுவையாக்கியது நியாயமா? அது போல தோற்றத்தை, குறைகளை கிண்டல் செய்யும் காமெடிகளும் நிறைய. இத்தனையும் சேர்ந்து நம்மை சிரிக்க வைப்பது என்னவோ குறைவாகத்தான்.

ஹிப்ஹாப் தமிழாவின் இசை படத்தை முழுவதுமாய் ஆக்கிரமிக்கிறது. அதீத சத்தம் பல இடங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. உண்மையில் கொண்டாட்டமாக இருப்பது ஒரு பாடல். மற்றவை 'கொஞ்சம் குறைச்சுக்கலாமே' ஃபீலிங்கைத்தான் கொடுக்கின்றன. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவு சில காட்சிகளை பிரம்மாண்டமாக்கியிருக்கிறது.

படத்தின் முடிவில் நல்ல கருத்தை சொல்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி. அதை விட முக்கியம் படம் முழுவதும் இன்னும் நல்ல திரைக்கதை இருப்பது. 'நான் சிரித்தால்' பார்த்தால் ஆங்காங்கே சிரிக்கலாம்.                                                  
  

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது.