Skip to main content

'திரௌபதி'யின் சபதம் என்ன? திரௌபதி - விமர்சனம் 

பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லை... இயக்குனர் புகழ்பெற்றவரில்லை... பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் இல்லை... ஆனால் இந்தப் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, விவாதங்கள் நடந்தன, பேசப்பட்டது. ஒரு சிறிய படம், அதுவும் 'க்ரௌட் ஃபண்டிங்' முறையில் பலரிடமும் பணம் பெற்று தயாரிக்கப்பட்ட படம், இந்த அளவு பேசப்படுவதே அதற்குக் கிடைத்த விளம்பரம்தான், வெற்றிதான். 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் 'இவருக்குள் ஏதோ இருக்கு' என்று எண்ண வைத்த இயக்குனர் மோகன் இப்போது 'திரௌபதி'யுடன் வந்துள்ளார். படம் பேசும் அரசியல், கையில் எடுத்திருக்கும் பிரச்னை, இவற்றின் அரசியல் சரித்தன்மை என்பதையெல்லாம் தாண்டி, ஒரு திரைப்படமாக 'திரௌபதி' எப்படியிருக்கிறது?

 

richardஆணவக்கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ருத்ர பிரபாகரன் (ரிஷி ரிச்சர்ட்), பெயிலில் வெளியே வருகிறார். நேராக தனது ஊரான விழுப்புரம் சேந்தமங்கலத்திற்கு செல்லாமல் சென்னை வரும் அவர், வடசென்னை பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடை போடுகிறார். தனது மனைவி திரௌபதியின் (ஷீலா ராஜ்குமார்) சபதத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற முடிவில் செயல்படும் அவர் அங்கு நடக்கும் பதிவுத் திருமணம் சார்ந்த முறைகேடுகளை கண்காணிக்கிறார். அந்த முறைகேடுகளை நடத்துபவர்களை கொலை செய்கிறார். ருத்ர பிரபாகரன், இந்தக் கொலைகளை செய்யக் காரணம் என்ன, அவரது பின்புலம் என்ன, அவரது மனைவி திரௌபதியின் சபதம் என்ன, அவர் என்ன ஆனார் என்பதே மோகன்.ஜி இயக்கியிருக்கும் 'திரௌபதி'.

போலிப் பதிவுத் திருமணங்கள் குறித்து நிஜத்தில் நடந்த ஒரு வழக்கை அடிப்படையாக வைத்துதான் இந்தக் கதையை எழுதியதாக இயக்குனர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார். கவனிக்கப்படாத இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து அதன் பின்புலத்தை, அந்த முறைகேடுகள் நடக்கும் விதத்தை சுவாரசியமாகக் காட்டுகிறது முதல் பாதி. ரிஷி ரிச்சர்ட், எதற்காக இந்த நடவடிக்கையில் இறங்குகிறார் என்ற சஸ்பென்ஸும் ஓரளவு நன்றாகவே வேலை செய்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் காரணமாக இருந்தாலும் நிஜமான தெருக்களில், இடங்களில் படம்பிடித்திருப்பது படத்திற்கு உதவியிருக்கிறது (சில இடங்களில் பொதுமக்கள் கேமராவை பார்ப்பது தவிர்த்து). கதையின் நாயகியான 'திரௌபதி' பாத்திரம் நல்ல முக்கியத்துவத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு படித்த கிராமத்துப் பெண், ஆக்கபூர்வமான சமூக பணிகளில் ஈடுபடுவது, காதலின் பெயரால் இளம்பெண்ணை தொந்தரவு செய்யும் இளைஞனை தைரியமாக இறங்கி அதிரடியாக தண்டனை கொடுப்பது, பொது பிரச்னைகளில் முன்னின்று பேசுவது என ஆரோக்கியமாக உருவாக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் ஷீலா சற்றே அதிகப்படியாக நடித்திருக்கிறார். அந்தப் பாத்திரத்தை சுற்றியே கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது சிறப்பு. அப்படி ஒரு பாத்திரமும் சில இடங்களில் பெருமை பொங்கப் பேசும் வசனங்கள் நெருடல்.

 

draupathi sheela rajkumarபட்ஜெட் காரணங்கள் படமாக்கலை பெருமளவில் பாதித்திருப்பது பல காட்சிகளில் நன்றாகத் தெரிகிறது. கொலைகளை விசாரிக்கும் போலீஸ் டீம், கோர்ட் காட்சிகள் உள்ளிட்டவை இன்னும் நம்பகத்தன்மையுடன் இருந்திருக்கலாம். பெரும்பாலான நடிகர்கள் செயற்கையாகவே தெரிவது படத்தின் பெரும் பலவீனம். இந்த நிலையில் கருணாஸ், அம்பானி சங்கர், ஆறு பாலா போன்ற நடிகர்களின் இருப்பு ஆறுதல். முதல் பாதி தரும் ஆர்வத்தை நீண்டுகொண்டே போகும் ஃபிளாஷ்பேக்கும் அதன் பிறகும் தொடரும் கோர்ட் காட்சிகளும் சோதித்து வடியச் செய்கின்றன. இந்தப் படத்திலும் விவசாயம், ஹைட்ரோகார்பன் ஆகிய கடமைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளை பேச வேண்டுமென்பதை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கதையைத் தாண்டிய கடமையாக எடுத்துக்கொண்டுள்ளனர் போல. மோகன்.ஜியும் விதிவிலக்கல்ல.

 

draupathi villainsரிஷி ரிச்சர்டுக்கு, ஒரு நடிகராக, நாயகனாக இது முக்கியமான வாய்ப்பு. ஓரளவு பயன்படுத்தி நடித்திருக்கிறார் என்றாலும் இன்னும் முழுமையான அளவை எட்டவில்லை. 'மாஸா'ன காட்சிகளில் அவரது குரலும் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை. உடல்மொழியையும் குரலையும் மெருகேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஜுபீனின் பின்னணி இசை சாதாரணமான காட்சிகளுக்கும் பூஸ்ட் கொடுத்து ஓட வைக்கிறது. பட்டினத்தாரின் வரிகள் ஒரு பாடலாகப்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் திடீரென செருகப்பட்டிருக்கும் பாடல்களில் நம்மால் ஒன்ற முடியவில்லை. மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவு படத்தை ஒரு கை கொடுத்து தாங்கிப் பிடித்திருக்கிறது. தேவராஜின் படத்தொகுப்பில் கூடுதல் சிரத்தை இருந்திருக்கலாம்.


மக்கள் அதிகம் அறியாத ஒரு ஆபத்தான பிரச்னையை பேசியிருப்பது நேர்மறை அம்சம். ஆனால், அதை பேசிய விதம் இன்னும் சில புதிய ஆபத்துகளை உண்டாகக்கூடிய அபாயத்தை கொண்டிருக்கிறது. வயதையும் பக்குவத்தையும் எட்டியவர்கள் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுக்கலாம் என்ற சுதந்திரத்தை சட்டம் கொடுத்திருக்கிறது. மாறி வரும் மனநிலையும் காலமும் அதை அங்கீகரிக்கின்றன. இந்த நிலையில் காதல், காதல் திருமணங்களின் மீதான அச்சத்தை, வெறுப்பை உண்டாக்குவது போன்ற வசனங்களும் காட்சிகளும் ஆபத்தானவை. குற்றங்கள் யாவும் ஒரு பக்கமாகத் திருப்பப்பட்டிருப்பது... நேர்மறையாகவும் மறைமுகமாகவும் சிலரை மகிழ்விக்கவும் சிலரை காயப்படுத்தக்கூடியதுமாக உருவாக்கப்பட்டிருக்கும் வசனங்கள்... ஆரோக்கியமானவைதானா? அவசியமானவைதானா?