Skip to main content

'திரௌபதி'யின் சபதம் என்ன? திரௌபதி - விமர்சனம் 

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லை... இயக்குனர் புகழ்பெற்றவரில்லை... பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் இல்லை... ஆனால் இந்தப் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, விவாதங்கள் நடந்தன, பேசப்பட்டது. ஒரு சிறிய படம், அதுவும் 'க்ரௌட் ஃபண்டிங்' முறையில் பலரிடமும் பணம் பெற்று தயாரிக்கப்பட்ட படம், இந்த அளவு பேசப்படுவதே அதற்குக் கிடைத்த விளம்பரம்தான், வெற்றிதான். 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் 'இவருக்குள் ஏதோ இருக்கு' என்று எண்ண வைத்த இயக்குனர் மோகன் இப்போது 'திரௌபதி'யுடன் வந்துள்ளார். படம் பேசும் அரசியல், கையில் எடுத்திருக்கும் பிரச்னை, இவற்றின் அரசியல் சரித்தன்மை என்பதையெல்லாம் தாண்டி, ஒரு திரைப்படமாக 'திரௌபதி' எப்படியிருக்கிறது?

 

richard



ஆணவக்கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ருத்ர பிரபாகரன் (ரிஷி ரிச்சர்ட்), பெயிலில் வெளியே வருகிறார். நேராக தனது ஊரான விழுப்புரம் சேந்தமங்கலத்திற்கு செல்லாமல் சென்னை வரும் அவர், வடசென்னை பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடை போடுகிறார். தனது மனைவி திரௌபதியின் (ஷீலா ராஜ்குமார்) சபதத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற முடிவில் செயல்படும் அவர் அங்கு நடக்கும் பதிவுத் திருமணம் சார்ந்த முறைகேடுகளை கண்காணிக்கிறார். அந்த முறைகேடுகளை நடத்துபவர்களை கொலை செய்கிறார். ருத்ர பிரபாகரன், இந்தக் கொலைகளை செய்யக் காரணம் என்ன, அவரது பின்புலம் என்ன, அவரது மனைவி திரௌபதியின் சபதம் என்ன, அவர் என்ன ஆனார் என்பதே மோகன்.ஜி இயக்கியிருக்கும் 'திரௌபதி'.

போலிப் பதிவுத் திருமணங்கள் குறித்து நிஜத்தில் நடந்த ஒரு வழக்கை அடிப்படையாக வைத்துதான் இந்தக் கதையை எழுதியதாக இயக்குனர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார். கவனிக்கப்படாத இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து அதன் பின்புலத்தை, அந்த முறைகேடுகள் நடக்கும் விதத்தை சுவாரசியமாகக் காட்டுகிறது முதல் பாதி. ரிஷி ரிச்சர்ட், எதற்காக இந்த நடவடிக்கையில் இறங்குகிறார் என்ற சஸ்பென்ஸும் ஓரளவு நன்றாகவே வேலை செய்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் காரணமாக இருந்தாலும் நிஜமான தெருக்களில், இடங்களில் படம்பிடித்திருப்பது படத்திற்கு உதவியிருக்கிறது (சில இடங்களில் பொதுமக்கள் கேமராவை பார்ப்பது தவிர்த்து). கதையின் நாயகியான 'திரௌபதி' பாத்திரம் நல்ல முக்கியத்துவத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு படித்த கிராமத்துப் பெண், ஆக்கபூர்வமான சமூக பணிகளில் ஈடுபடுவது, காதலின் பெயரால் இளம்பெண்ணை தொந்தரவு செய்யும் இளைஞனை தைரியமாக இறங்கி அதிரடியாக தண்டனை கொடுப்பது, பொது பிரச்னைகளில் முன்னின்று பேசுவது என ஆரோக்கியமாக உருவாக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் ஷீலா சற்றே அதிகப்படியாக நடித்திருக்கிறார். அந்தப் பாத்திரத்தை சுற்றியே கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது சிறப்பு. அப்படி ஒரு பாத்திரமும் சில இடங்களில் பெருமை பொங்கப் பேசும் வசனங்கள் நெருடல்.

 

draupathi sheela rajkumar



பட்ஜெட் காரணங்கள் படமாக்கலை பெருமளவில் பாதித்திருப்பது பல காட்சிகளில் நன்றாகத் தெரிகிறது. கொலைகளை விசாரிக்கும் போலீஸ் டீம், கோர்ட் காட்சிகள் உள்ளிட்டவை இன்னும் நம்பகத்தன்மையுடன் இருந்திருக்கலாம். பெரும்பாலான நடிகர்கள் செயற்கையாகவே தெரிவது படத்தின் பெரும் பலவீனம். இந்த நிலையில் கருணாஸ், அம்பானி சங்கர், ஆறு பாலா போன்ற நடிகர்களின் இருப்பு ஆறுதல். முதல் பாதி தரும் ஆர்வத்தை நீண்டுகொண்டே போகும் ஃபிளாஷ்பேக்கும் அதன் பிறகும் தொடரும் கோர்ட் காட்சிகளும் சோதித்து வடியச் செய்கின்றன. இந்தப் படத்திலும் விவசாயம், ஹைட்ரோகார்பன் ஆகிய கடமைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளை பேச வேண்டுமென்பதை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கதையைத் தாண்டிய கடமையாக எடுத்துக்கொண்டுள்ளனர் போல. மோகன்.ஜியும் விதிவிலக்கல்ல.

 

draupathi villains



ரிஷி ரிச்சர்டுக்கு, ஒரு நடிகராக, நாயகனாக இது முக்கியமான வாய்ப்பு. ஓரளவு பயன்படுத்தி நடித்திருக்கிறார் என்றாலும் இன்னும் முழுமையான அளவை எட்டவில்லை. 'மாஸா'ன காட்சிகளில் அவரது குரலும் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை. உடல்மொழியையும் குரலையும் மெருகேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஜுபீனின் பின்னணி இசை சாதாரணமான காட்சிகளுக்கும் பூஸ்ட் கொடுத்து ஓட வைக்கிறது. பட்டினத்தாரின் வரிகள் ஒரு பாடலாகப்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் திடீரென செருகப்பட்டிருக்கும் பாடல்களில் நம்மால் ஒன்ற முடியவில்லை. மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவு படத்தை ஒரு கை கொடுத்து தாங்கிப் பிடித்திருக்கிறது. தேவராஜின் படத்தொகுப்பில் கூடுதல் சிரத்தை இருந்திருக்கலாம்.


மக்கள் அதிகம் அறியாத ஒரு ஆபத்தான பிரச்னையை பேசியிருப்பது நேர்மறை அம்சம். ஆனால், அதை பேசிய விதம் இன்னும் சில புதிய ஆபத்துகளை உண்டாகக்கூடிய அபாயத்தை கொண்டிருக்கிறது. வயதையும் பக்குவத்தையும் எட்டியவர்கள் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுக்கலாம் என்ற சுதந்திரத்தை சட்டம் கொடுத்திருக்கிறது. மாறி வரும் மனநிலையும் காலமும் அதை அங்கீகரிக்கின்றன. இந்த நிலையில் காதல், காதல் திருமணங்களின் மீதான அச்சத்தை, வெறுப்பை உண்டாக்குவது போன்ற வசனங்களும் காட்சிகளும் ஆபத்தானவை. குற்றங்கள் யாவும் ஒரு பக்கமாகத் திருப்பப்பட்டிருப்பது... நேர்மறையாகவும் மறைமுகமாகவும் சிலரை மகிழ்விக்கவும் சிலரை காயப்படுத்தக்கூடியதுமாக உருவாக்கப்பட்டிருக்கும் வசனங்கள்... ஆரோக்கியமானவைதானா? அவசியமானவைதானா?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!