Skip to main content

இப்படி ஒருவர் மீது எப்படித்தான் காதல் வருதோ? ஆதித்ய வர்மா - விமர்சனம்

Published on 27/11/2019 | Edited on 28/11/2019

படிப்பு, பணம், திறமை, நல்ல நண்பர்கள், செல்லம் கொடுக்கும் குடும்பம், ஈர்க்கும் தோற்றம்... என ஒரு இளைஞனின் ஆசையாக என்னென்ன இருக்குமோ அது அத்தனையும் இயல்பாகக் கிடைக்கப்பெற்ற ஒரு இளைஞன், தான் பெற்று, கொண்டாடி, அனுபவித்து வரும் காதலை இழந்தால்...? அந்த சூழலை அவன் எப்படி எதிர்கொள்வான்? அந்த வலியை அவன் எப்படி கடப்பான்? இதுதான் 'ஆதித்ய வர்மா'. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாக, தென்னிந்தியா முழுதும் கவனத்தை ஈர்த்த தெலுங்கு படமான 'அர்ஜுன் ரெட்டி'யை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் கிரீசாயா.
 

dhruv vikram



தனக்குத் தேவையான அனைத்தையும் தானே எடுத்துக்கொள்ளும், கிட்டத்தட்ட சுயநலவாதியான ஒரு முரட்டு இளைஞன் 'ஆதி' என்று அழைக்கப்படும் 'ஆதித்ய வர்மா'. தனக்கு தப்பு என்று பட்டால் விளைவுகளை பற்றிய கவலை இல்லாமல் இறங்கி அடிப்பவன். மங்களூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் சீனியர் மாணவனான ஆதி, படிப்பில் தனது பேட்ச் டாப்பர், விளையாட்டிலும் வெறித்தனம் காட்டுபவர், ஆனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத 'ஆங்கர் மேனேஜ்மேண்ட்'டில் பலவீனமான ஒரு மருத்துவர். தன் கல்லூரியில் புதிதாக சேரும் ஜுனியர் மாணவியான மீரா ஷெட்டி மீது காதல் செய்கிறார். உண்மையாக சொல்லவேண்டுமானால், தானே எடுத்துக்கொள்கிறார். அவரது உரிமை நிறைந்த அதிரடி அன்பினில், கோபத்தினில், அக்கறையில் ஈர்க்கப்படும் மீராவும் ஆதியை காதல் செய்கிறார். கல்வி முடிந்தும் தொடரும் காதலை ஒரு கட்டத்தில் சாதி பிரிக்கிறது. அந்தப் பிரிவினால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படும் ஆதி, போதையின் அத்தனை வடிவங்களையும் துணைக்கு அழைக்கிறார். ஒரு இளைஞனுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் பெற்ற ஒருவன், இந்தக் காதலை இழப்பதால், அதன் மீது அளவுக்கு அதிகமாகக் கொண்ட ஈடுபாட்டால் எந்த நிலைக்கு செல்கிறான் என்பதை இந்தக் காலகட்டத்தின் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

 

 

banita sandhu



துருவ் விக்ரம், தனது தோற்றத்தை மிஞ்சிய குரலாலும் நடிப்பாலும் அந்த முரட்டு இளைஞன் பாத்திரத்தை மிக சிறப்பாகவே பிரதிபலித்திருக்கிறார். அழகான தோற்றம், 'பேஸ்' குரல், 'க்ளாஸ்' ஆன உடைகள் என இளைஞர்களை ஈர்க்கிறார். ஒரு நாயகனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளக் கூடிய திறன் இருப்பதை அத்தனை பரிமாணங்களிலும் நிறுவுகிறார். நாயகி பனிதா சந்து, எளிமையான அடக்கமான அழகு. அதிகம் அதிர்வு காட்டாமல் நாயகனுக்கு ஒத்து நடந்திருக்கிறார். நண்பனாக வரும் அன்புதாசன், ஆதியின் தந்தையாக வரும் ராஜா, மீராவின் தந்தையாக வரும் அச்யுத் குமார், பாட்டி லீலா சாம்சன் உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தின் தேவைக்கு ஏற்ப தங்கள் நடிப்பை சிறப்பாகக் கொடுத்துள்ளார்கள். கொஞ்ச நேரம் மட்டுமே வரும் பகவதி பெருமாள், வழக்கம் போல கலக்குகிறார். பிரியா ஆனந்த், படத்தில் போனஸ் அட்ராக்‌ஷன்; ஆழம் இல்லை.


'இப்படி நம்மால் இருக்க முடியாதா' என இளம் ஆண்களையும் 'இப்படி ஒருவன் நமக்கு இருந்தால் எப்படி இருக்கும்' என இளம் பெண்களையும் எண்ண வைக்கும் 'ஆதித்ய வர்மா' பாத்திரம்தான் படத்தின் மையம். அவரது ஸ்மார்ட்னெஸ்ஸும் முரட்டு தைரியமும் காதலும் ரசிகர்களை ஈர்க்கின்றன. காதலர்களிடையேயான நெருக்கம் கூடுதல் போதை. அவ்வளவு நெருக்கமாக, சுதந்திரமாக இருந்த காதலர்களிடையே ஏற்படும் பிரிவு, அதனால் நாயகன் படும் வேதனைகள் தரும் அதிர்வு... இவை அத்தனையும் படத்தின் பலம். இவையே சற்று அதீததமாகச் செல்வது நம்மை சங்கடப்படுத்துகிறது. நாயகனின் சில நடவடிக்கைகள், 'இப்படி ஒருத்தன் மீது எப்படித்தான் காதல் வருதோ' என்று தோன்ற வைக்கின்றன. படத்தின் எங்கெங்கு காணினும் முத்தங்கள், போதை... நிதர்சனம் என்றாலும் இவ்வளவு தேவையா? மங்களூர் மருத்துவக் கல்லூரி, வர்மா - ஷெட்டி பெயர்கள், 'யார் கொடுப்பாடா கேரண்டி?', 'நீ சுவாசிக்கிற ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்' போன்ற வசனங்கள் என படத்திடம் இருந்து நம்மை தள்ளிவைக்கும் காரணிகள் நிறைய இருக்கின்றன.

 

 

dhruv vikram



ஆதித்ய வர்மா மீது ஏற்படும் ஈர்ப்புக்கு ரதனின் இசை மிக முக்கிய காரணம். நாயகனுக்கான அந்த செம்ம தீம் இசை நமக்குள் நெருப்பை பற்ற வைக்கிறது. 'அமுதங்களால் நிறைந்தேன்' பாடல் நிறைந்த காமத்தை காதலாக உணர வைக்கிறது. ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு படம் முழுவதையும் மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறது. விவேக் ஹர்ஷன் படத்தை செம்மையாகத் தொகுத்திருக்கிறார், நீளத்தைக் குறைப்பதில் இன்னும் கொஞ்சம் உரிமை எடுத்திருக்கலாம்.

அனைத்தையும் தாண்டி சாகச மனநிலை, சுதந்திர மனநிலை கொண்ட இளைஞர்களை ஈர்க்கத்தான் செய்வான் ஆதித்ய வர்மா.                                                            

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.