கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்கா முத்திரையைப் பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ளார். சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த யுவன் சங்கர் ராஜா, 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் என தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குறித்து யுவன் கூறுகையில், "அவரின் இழப்பு மறக்க முடியாத ஒன்று. நா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரும் நானும் இணைந்து அதிக படங்களில் பணியாற்றியிருக்கோம். நாங்க ஸ்டூடியோவில் கம்போஸ் பண்ணிட்டு இருக்கும் போதே இதோ வந்தரண்ணான்னு சொல்லிட்டு உடனே போய் பாடல் எழுதிட்டு வந்து கொடுத்து அங்கேயே ரெக்கார்ட் பண்ண பாடல்களும் அதிகம் இருக்கு. அதுல நிறைய பாட்டு ஹிட்டாயிருக்குன்னு" தெரிவித்தார்.