Skip to main content

நெருக்கடியில் சிக்கிய பாலச்சந்தர்... நெகிழ வைத்த ரஜினி!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

rajinikanth

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"வாழ்க்கையில் நன்றி என்பது மிகமுக்கியம். நமக்கு வாழ்க்கை கொடுத்தவர்கள், நம்மை வாழ்க்கையில் உயர்த்திவிட்டவர்கள், உன்னதமான இடத்திற்குச் சென்று நாம் ஒளிவீசக் காரணமாக இருந்தவர்களை வாழ்க்கையில் எந்தக் காலகட்டத்திலும் மறக்கக்கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்க்கையில் எவ்வாறு நன்றி மறக்காமல் நடந்துகொண்டார் என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். 

 

'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலமாக கே.பாலச்சந்தர் சார் நடிகர் ரஜினிகாந்தை திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அந்தப்படத்தில், ரஜினிகாந்திற்கு அருமையான கதாபாத்திரத்தை பாலச்சந்தர் சார் கொடுத்திருப்பார். அந்தப்படம் வெளியான பிறகு ஒரே இரவில் நடிகர் ரஜினிகாந்த் பிரபலமானார். நடிகர் ரஜினிகாந்தின் கலைவாழ்க்கை பயணத்தில் எந்த அளவிற்கு ஒளியேற்றும் விளக்காக பாலசந்தர் சார் இருந்தார் என்பதற்கு 'மூன்று முடிச்சு', 'தப்பு தாளங்கள்', 'நினைத்தாலே இனிக்கும்' எனப் பல படங்களை உதாரணமாகக் கூறலாம். அதன் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் நிறைய படங்களில் நடித்தது, புகழ் பெற்றது, சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் உன்னதமான இடத்தில் அமர்ந்தது என அனைத்தும் நாமறிந்ததே.

 

முதலில் வேறுநிறுவனங்களுக்கு படம் இயக்கிவந்த கே.பாலச்சந்தர், ஒரு கட்டத்திற்குப் பிறகு கவிதாலயா எனச் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். கவிதாலயா தயாரிப்பிலும் 'ராகவேந்திரா', 'நெற்றிக்கண்' எனப் பல படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தால் காமெடியிலும் கொடிகட்டிப்பறக்க முடியும் என்பது கே.பாலசந்தர் இயக்கிய 'தில்லு முல்லு' திரைப்படம் மூலம் நிரூபணமானது. அப்படம்தான் ரஜினிகாந்தின் வேறொரு பக்கத்தை மக்களிடம் காட்டியது. 

 

writer sura

 

'மணல் கயிறு' படத்தின் மூலம் தன்னுடைய தயாரிப்பைத் தொடங்கிய கவிதாலயா நிறுவனம் பல படங்களைத் தயாரித்ததன் மூலம் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகத் தமிழ்த் திரையுலகில் வலம்வந்தது. அந்தச் சமயத்தில், நடிகர் பிரபுவை வைத்து 'டூயட்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்க கே.பாலச்சந்தர் திட்டமிட்டார். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்தக் காலகட்டத்தில், படம் ஆரம்பிக்கும்போதே பாதி பணம் கொடுத்து விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கிவிடுவார்கள். படத்தின் பணிகள் முடிந்து ரிலீசிற்குத் தயாராகும்போது மீதி பணத்தைக் கொடுத்து பிரிண்ட் காப்பியை வாங்கிக்கொள்வார்கள்.

 

பட வேலைகள் முடிந்தபின் விநியோகஸ்தர்களுக்கு டூயட் படத்தைக் கே.பாலச்சந்தர் திரையிட்டுக் காண்பிக்கிறார். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள், இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாது என்ற முடிவிற்கு வருகின்றனர். ஆகையால், முதலில் பேசிய முழுத்தொகையை தங்களால் தர முடியாது; அட்வான்ஸ் கொடுத்த தொகையை முழுப்பணமாக எடுத்துக்கொண்டு படத்தை எங்களுக்கு தரவேண்டும் என விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒருசேர இணைந்து கேட்கின்றனர். பாலச்சந்தர் எவ்வளவோ பேசியும் விநியோகஸ்தர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. 

 

டூயட் படம் வெளியாகிறது; மிகப்பெரிய தோல்வி. எதிர்கொள்ள முடியாத அளவிற்கு மிகப்பெரிய இழப்பை அந்தப்படம் கவிதாலயா நிறுவனத்திற்குக் கொடுத்தது. இழுத்துமூடும் அளவிற்குக் கடுமையான பொருளாதார இழப்பை கவிதாலயா எதிர்கொண்டது. அப்போது ரஜினியை சந்தித்த கே.பாலச்சந்தர், கவிதாலயா நிறுவனத்தின் நிலையை விளக்கிக் கூறியுள்ளார். மேலும், 'நீ மனசு வச்சாமட்டும்தான் விழுந்து கிடக்குற கவிதாலயா எழுந்து நிற்க முடியும்' எனக் கூறியுள்ளார். 

 

அந்த நேரத்தில், வெங்கடராம ரெட்டி தயாரிப்பில் உருவான 'உழைப்பாளி' திரைப்படம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய அடுத்த படத்திற்கான கால்ஷீட்டையும் வெங்கடராம ரெட்டிக்கே ரஜினிகாந்த் கொடுத்திருந்தார். தன்னை உருவாக்கிய மனிதன், தனக்குப் பிள்ளையார் சுழி போட்ட மனிதன், தன்னை ஒளிவீச வைத்த உத்தமர் வந்து கேட்ட ஒரே காரணத்திற்காகத் தன்னுடைய அடுத்த படக் கால்ஷீட்டை பாலச்சந்தர் சாருக்கு ரஜினிகாந்த் வழங்கினார். அந்த கால்ஷீட்டில் உருவான திரைப்படம்தான் 'முத்து'. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான அந்தத் திரைப்படம் 100 நாட்களுக்கு மேலாக ஓடி வெற்றிபெற்றது. இழுத்துமூடும் நிலையில் இருந்த கவிதாலயா நிறுவனம் ரஜினி கைகொடுத்ததால் அந்தச் சரிவில் இருந்து மீண்டு, தொடர்ந்து செயல்பட்டது".

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!

Next Story

டைகர் ஷெராப் படம் வெற்றியடைய ரஜினிகாந்த் வாழ்த்து!

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Rajinikanth wishes Tiger Shroff film a success

 

ஷாருக்கானின் ஜவானுக்குப் பிறகு பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கண்பத். டைகர் ஷெராப், கீர்த்தி சனோன், அமிதாப்பச்சன் நடித்துள்ள இப்படத்தினை விகாஸ் பாஹ்ல் இயக்கியிருக்கிறார். பூஜா எண்டர்டெயிண்ட் மற்றும் குட் கோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியில் தயாரிக்கப்பட்ட படம் தமிழ், தெலுங்கு, கன்னடம். மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. சூப்பர் ஹீரோ பின்னணியில் படம் உருவாகியிருக்கிறது.

 

இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டைகர் ஷெராப் மற்றும் கண்பத்தின் அனைத்து நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்; படம் மாபெரும் வெற்றியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.