Skip to main content

எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி பாடல் காட்சியில் புதுமை காட்டி பாராட்டுகளை அள்ளிய இயக்குநர்  

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், 'பறக்கும் பாவை' திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி நடிப்பில் 1966ஆம் ஆண்டு வெளியான 'பறக்கும் பாவை' திரைப்படம் முழுக்க முழுக்க சர்க்கஸ் பின்னணியில் எடுக்கப்பட்டது. டி.ஆர்.ரமணா படத்தை தயாரித்து இயக்கினார். மாறுபட்ட கதையம்சத்துடன் கூடிய கமர்ஷியல் படங்கள் எடுத்து அந்தக் காலத்தில் பெரிய வெற்றிகண்டவர்  டி.ஆர்.ரமணா. எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜியை வைத்து கூண்டுக்கிளி என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். 

 

தமிழில் சர்க்கஸ் பின்னணியில் பெரியளவில் படங்கள் வராததால் முழுக்க முழுக்க சர்க்கஸ் பின்னணியில் ஒரு படத்தை எடுக்க டி.ஆர்.ரமணா முடிவெடுக்கிறார். படத்திற்கான திரைக்கதை, வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதுகிறார். படத்தின் நிறைய காட்சிகளை நேஷனல் சர்க்கஸிலேயே படமாக்கியிருப்பார்கள். அங்கிருக்கும் கலைஞர்கள் மற்றும் விலங்குகளை படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள். 

 

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கான மதுரை தங்கம் தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்தேன். படத்தில் எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் சர்க்கஸ் பார் விளையாட்டில் ஈடுபடும் காட்சியை பார்த்து நான் பிரமித்துவிட்டேன். படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. டி.ஆர்.ரமணா எப்போதுமே தன்னுடைய படங்களில் ஏதாவது புதுமை காட்டுவார். அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரு பாடல் முழுவதையுமே குளியலறையில் படமாக்கியிருப்பார். 'உன்னைத்தானே...' என்ற பாடலில் எம்.ஜி.ஆர். ஒரு குளியலறையில் குளித்துக்கொண்டிருப்பார். பக்கத்து அறையில் சரோஜா தேவி குளித்துக்கொண்டு இருப்பார். எந்த நடனமும் இல்லாமல் புதுமையான முறையில் ரமணா படம்பிடித்திருப்பார். இன்றைக்கு படங்களில் புதுமை காட்டுகிறோம் என்கிறார்கள். ஆனால், இது மாதிரியான பல புதுமைகளை டி.ஆர்.ரமணா அன்றைக்கே காட்டியிருக்கிறார். 

 

சிட்டியில் இருக்கும் மக்களைத் தவிர, தமிழகம் முழுவதும் உள்ள பிற மக்கள், சிறிய அளவிலான சர்க்கஸ்களைத் தான் அதிகம் பார்த்திருப்பார்கள். பெரிய சர்க்கஸ்களை பார்ப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருக்காது. அதனால் 'பறக்கும் பாவை' திரைப்படம் வெளியானபோது சர்க்கஸ் கலைஞர்களின் சாகசம், அதிலுள்ள மிருகங்கள், பிராணிகள் செய்யக்கூடிய சாகசம், அந்தக் கலைஞர்களின் அபாரமான உழைப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் அமைந்தது. இந்த புதிய அனுபவத்திற்காகவே மக்கள் திரையரங்கிற்கு கூட்டம்கூட்டமாக வந்தார்கள். அதன் காரணமாக எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் சர்க்கஸ் கலைஞர்களாகவே வாழ்ந்திருந்த 'பறக்கும் பாவை' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்