Skip to main content

ராம்குமார் கணேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

warrent against for ramkumar ganesan

 

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான அக்‌ஷய் சரண் என்பவர் செக் மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் துஷ்யந்தின் மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு வியாபார நடவடிக்கைகளுக்காக துஷ்யந்த் சார்பில் ரூ.15 லட்சத்துக்கான இரண்டு காசோலைகள் அளித்ததாகவும் அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். 

 

வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது தெரிந்தும் வேண்டுமென்றே தங்களுக்குக் காசோலை அளித்ததாகவும், இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு பதிலளிக்காததுடன்  தங்களது பணத்தையும் திரும்ப அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். எனவே துஷ்யந்த் மீதும் அவரது மனைவி அபிராமி மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகன் கொடுக்க வேண்டிய பணத்திற்குப் பொறுப்பேற்பதாக ராம்குமார் உத்தரவாதம் அளித்துள்ளதால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துஷ்யந்த், அபிராமி, ராம்குமார் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. 

 

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனாக இருக்கும் ராம்குமார், தமிழில் சிவாஜி புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதோடு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் துஷ்யந்த் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பயணித்துள்ளார். இவர்கள் இரண்டு பேருமே பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ, அன்றைக்குத் தான் என் மரணம்" - பாரதிராஜா

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

bharathiraja about muthal mariyaathai movie re release and sivaji

 

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் 'முதல் மரியாதை'. ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று கிட்டத்தட்ட 200 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் 33வது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படத்திற்காக பாரதிராஜாவும் சிறந்த பாடல் வரிகளுக்காக வைரமுத்துவும் விருது வாங்கினர். 

 

இந்த நிலையில் 38 ஆண்டுகள் கழித்து இப்படம் டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் உள்ள 67 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு திரையரங்கிற்கு சென்ற பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. சினிமா என்பது பெரிய கலை மற்றும் பொக்கிஷம். நான் சிறு குழந்தையாக இருக்கும் போது அண்ணாந்து பார்த்து வியந்து எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதற்கும், தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக் கற்றுக் கொண்டதற்கும் காரணமானவர் ஒரே ஒரு மனிதன் நடிகர் சிவாஜி கணேசன் தான். சிவாஜி இல்லையென்றால் பாரதிராஜா இல்லை. இன்றளவும் என்னை நடிக்க அழைக்கிறார்கள் என்று சொன்னால் சிவாஜி போட்ட பிச்சை. 

 

இப்படத்திற்கு முதல் மரியாதை என தலைப்பு வைக்கப்பட்டது என பலருக்கு சந்தேகம். என் வாழ்க்கையில் சரஸ்வதி, லட்சுமி, முருகன் என யார் யாரையோ கும்பிட்டுள்ளேன். எங்க அப்பா, அம்மாவுக்கும் மரியாதை கொடுத்துள்ளேன். ஆனால் திரையுலகில் நுழைந்து என்னை வாழ வைத்த தெய்வம் சிவாஜி அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அதை செய்தேன். 50 ஆண்டுகள் கழித்தும் இன்றும் பசுமையாக இருக்கிறது முதல் மரியாதை.

 

இன்றைக்கும் என் முன்னால் நிறைய மைக்குகள் இருக்கின்றன. என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ அன்றைக்கு தான் என் மரணம். உங்கள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். வாழ்வேன். இன்னும் நீண்ட காலம் வாழ்வேன்" என்றார்.    

 

 

Next Story

"பராசக்தி படத்தைப் பார்த்தபோது அம்பேத்கரின் கூற்றுதான் தோன்றியது" - வெற்றிமாறன்

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

vetrimaaran speech at 70 Years of Parasakthi function

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனத்தில் சிவாஜி நடிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், 1952 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பராசக்தி'. இப்படம் வெளியாகி 70 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் சிறப்பு திரையிடலோடு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

 

நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், "நம்ம தமிழ் சினிமா சூழலில் அல்லது தமிழ்நாட்டுச் சூழலில் சமூகம் சார்ந்த திரைப்படங்களை எடுக்க நினைப்பவர்கள், அவர்களுக்கு சிறந்த 5 படங்கள் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது எனும் சொல்லும் பட்சத்தில், அதில் பராசக்தி கண்டிப்பா ஒரு படமாக இருக்கும். இப்படத்தைப் பார்த்தபோது அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி மக்களுக்குப் பெரிய பலனைக் கொடுக்காது என்ற அம்பேத்கரின் கூற்றுதான் தோன்றியது.

 

எல்லா நிலைகளிலும் எளிய மனிதர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகச் சூழலில் பார்த்தால் சாதிய அடிமைத்தனம், குடும்பச் சூழலில் பார்த்தால் பெண் அடிமைத்தனம் எனப் பல நிகழ்வுகளை சொல்லலாம். அவை அனைத்தும் இப்படத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை ஒன்று சேர்ப்பதற்கான தொடக்க சினிமாவாக இப்படம் இருந்தது. அப்படி ஒரு முக்கியமான படம் பராசக்தி. 

 

இன்றளவும் இப்படம் பொருந்திப் போகுது. அதே சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவை அனைத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நிறைய விஷயங்கள் இருக்கு. இப்படம் இன்னும் 30 வருடம் 50 வருடம் கழித்தும் தொடர்புடையதாக இருக்கும். இப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கு. 70 வருடம் கழித்து அதைக் கொண்டாட வேண்டிய இடத்தில் இருக்கோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.