/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/191_12.jpg)
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான அக்ஷய் சரண் என்பவர் செக் மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் துஷ்யந்தின் மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததாகத்தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு வியாபார நடவடிக்கைகளுக்காக துஷ்யந்த் சார்பில் ரூ.15 லட்சத்துக்கான இரண்டு காசோலைகள் அளித்ததாகவும் அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது தெரிந்தும் வேண்டுமென்றே தங்களுக்குக் காசோலை அளித்ததாகவும், இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு பதிலளிக்காததுடன்தங்களது பணத்தையும் திரும்ப அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். எனவே துஷ்யந்த் மீதும் அவரது மனைவி அபிராமி மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகன் கொடுக்க வேண்டிய பணத்திற்குப்பொறுப்பேற்பதாக ராம்குமார் உத்தரவாதம் அளித்துள்ளதால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துஷ்யந்த், அபிராமி, ராம்குமார் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனாக இருக்கும் ராம்குமார், தமிழில் சிவாஜி புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதோடு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் துஷ்யந்த் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பயணித்துள்ளார். இவர்கள் இரண்டு பேருமே பாரதியஜனதா கட்சியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)