சென்னை, சேலம் இடையே தற்போது 330 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 4 வழிச்சாலைகள் உள்ளன. இந்நிலையில் இந்த தூரத்தை குறைப்பதற்காக பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி சாலை அமைக்கும் பட்சத்தில் இதன் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களும், கிராமங்களும் மற்றும் 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளதனால் இயற்கை வளங்கள் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பிலுருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக் தற்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள், வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்" என பிரசிலில் உள்ள பாலத்தின் வீடியோவோடு பதிவிட்டுள்ளார்.