தமிழ் சினிமாவில் நடித்தவர் விசித்ரா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். முத்து படத்தில் வடிவேலுக்கு ஜோடிபோல இவர் நடித்திருக்கும் காட்சி பலருக்கும் நினைவு இருக்கும். 90 களில் பல படங்களில் நடித்து வந்த இவர் 2000த்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டார்.

vichithra

Advertisment

Advertisment

அண்மையில் விசித்ரா ட்விட்டரில் இணைந்தார். அதில் ரசிகர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கும் பதிலளித்து வந்தார். இந்நிலையில் திடீரென ரசிகர்களுக்கு தன்னுடைய அறிவுரையை ட்வீட் பதிவாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவியில், "அன்பார்ந்த அனைவருக்கும், சமூக வலைதளத்தில் நான் உங்களுடன் உரையாட ஆரம்பித்து 8 மாதங்கள் ஆகின்றன. என்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கவர்ச்சியான எனது சில புகைப்படங்களை எளிதாக என்னால் பகிர முடியும். ஆனால், இன்னொருவரைப் போல என்னால் நடிக்க முடியாது. ஆம், நான் நடிகைதான். உளவியல் நிபுணரும் கூட. ஆனால், எல்லாவற்றுக்கும் மேல் நான் மூன்று மகன்களின் தாய். ஒரு தாயாக, ஒரு நட்சத்திரமாக இந்தச் சமுதாயத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது தலையாய கடமை.

திரைப்படங்களில் நாம் இன்னொருவரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறோம். எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறோமோ, அதற்கு நியாயம் செய்ய வேண்டியது நடிகராக எங்களது கடமை. இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களின் இருண்ட பகுதிகளுக்கு இரையாகின்றனர். எனது ட்வீட்டுகளில் நான் காட்டமாகப் பேசுவதாக நீங்கள் நினைக்கலாம், உண்மை. கசப்பு மருந்துகள்தான் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்லது.

தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்தி அனுப்பி, அவர்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்தவர்களுக்கு உதவ ஆசைதான். ஆனால், நிபுணர்களிடம் ஆலோசனை பெறுங்கள் என்பதே எனது யோசனை. உடல் கேடு உங்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், உள்ளக்கேடு உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான் உங்களுக்கு நல்வார்த்தைகள் சொன்னால், அதை மனப்பூர்வமாகச் சொல்கிறேன். உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களை மோசமான பாதைக்கு இட்டுச்செல்லும் விஷயங்களில் இருந்து உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்" என்று தெரிவித்துள்ளார் விசித்ரா.