விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.
இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார்.