Skip to main content

''ஒரு கணத்தில் என் சாவை நேரில் பார்த்தேன்'' - விஷால் சிலிர்ப்பு 

விஷால் - சுந்தர் சி கூட்டணியில், தமன்னா நாயகியாக நடித்த 'ஆக்‌ஷன்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் இப்படம் குறித்து பேசியபோது..... 

 

vishal

 

''சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார். ‘சங்கமித்ரா’ தான் சுந்தர்.சியின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் 'ஆக்‌ஷன்' தான். ஏனென்றால், ஒரு காட்சியில் கிட்டத்தட்ட ஒரு டன் எடை கொண்ட பைக் என் மேல் விழுந்து என் கையிலும், காலிலும் அடிப்பட்டு ஐந்து மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது. அந்தசமயம் ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். அதன்பிறகு  இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

 

csc

 

வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதர் அர்ஜுன் சார் தான். ஆனால், ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் மிக குறைந்த செலவில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். வெறும் 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஹிப்ஹாப் ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும். எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.

 

 

சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. அக்கன்ஷாபூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அக்கன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால், அக்கன்ஷா அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்ட அன்றே படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார். சாயாசிங் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. இப்படம் மூலம் எனக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். யூடியூப்பில் சாரா உடைய குறும்படத்தைப் பார்த்தேன். தைரியமாக நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகர். 15 வருடங்களுக்கு முன்பிருந்தது போல் இப்பொழுது இல்லை. இன்று யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளராக ஆகி விடுகிறார்கள். நான் தற்போது லண்டன் செல்லவிருக்கிறேன். 'துப்பறிவாளன் 2‘ படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 'ஆக்‌ஷன்' படத்தை பெரிய திரையில் காணுங்கள். இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா லக்ஷமி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்'' என்றார்.