Skip to main content

“சாகுறவரைக்கும் அந்த விஷயம் என்னை உறுத்திக்கிட்டே இருக்கும்” - விஷால் வேதனை

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
vishal about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்பு விஜயகாந்த்தின் இல்லத்திற்குச் சென்று அவரது உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், “இந்த வீடு எனக்கு புதுசு இல்லை. இதுக்கு முன்னாடியும் வந்திருக்கேன். நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளராக ஜெயிச்சு, இந்த வீட்டிற்கு வரும்போது, பிரேமலதா அம்மா, சொன்ன விஷயம் இன்னும் என் காதுல ஒலிக்குது. அது என்ன விஷயம்ன்னா, விஜயகாந்த் கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டு அதன் பத்திரத்தை வீட்டிற்கு கொண்டு வரும் போது, லாக்கரில் உன்னுடைய நகையெல்லாம் எடு... பத்திரத்தை வைக்கனும்...அப்படினு விஜயகாந்த் பிரேமலதா அம்மா கிட்ட சொன்னதாக அவர் என்னிடம் கூறினார். அப்பேர்பட்ட மனிதர் நம்மிடம் இல்லை என்பது, ஒரு தர்மசங்கடமான விஷயம். சில மனிதர்கள் 100 வயசு வாழனும் என்று எல்லாரும் எதிர்பார்ப்போம். ஆனால் அவர்களது இழப்பு பெரிய இழப்பா இருக்கும். அந்த வகையில் விஜயகாந்த் இழப்பு பெரிய இழப்பு. சமூகத்தில் ஒரு மனிதராக பெயர் வாங்குவது சாதாரணமான விஷயம் கிடையாது.

விஜயகாந்த் என்ற வார்த்தை வெறும் வாயில் மட்டுமல்ல அடிவயிற்றில் இருந்து ஒவ்வொருத்தரும் சொல்லுவாங்க. ஏன்னா, அந்த வயித்த நிறைப்பின சாமி விஜயகாந்த். லட்சக்கணக்கான பேருக்கு சாப்பாடு போட்டிருக்கார். ஒரு நடிகரா, சமூக சேவகரா, அரசியல்வாதியா... அவரது மூன்று முகங்களுக்கு நான் ரசிகன். சட்டமன்றத்தில் அவ்ளோ தைரியமாக பேசின ஒரு மனிதர்.  ஒரு பொதுச்செயலாளரா, ஒரு ரசிகனா, விஜயகாந்த் அண்ணனுடன் கூடவேயிருந்து இறுதி ஊர்வலத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை. இந்த விஷயம் நான் சாகுறவரைக்கும் என்னை உறுத்திக்கிட்டே இருக்கும்” என்றார். 

அவரிடம் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது, காலணி வீசிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கூட்டத்தில் யார் வீசினார் என்றும், எதற்காக வீசினார்கள் என்றும் யோசிக்க முடியாது. விஜய்யுடைய கலைத்துறையில் முக்கியத் தூணாக இருந்த விஜயகாந்த்தை பார்த்து அஞ்சலி செலுத்த போயிருக்கார். அவ்ளோ பெரிய கூட்டம் வரும் போது இது போன்று நடக்கும் என்று தெரியாது. அதை ரசிகர்கள் தவிர்த்திருக்கலாம்” என்றார். 

சார்ந்த செய்திகள்