விக்ரம் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். இதில் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இப்படத்தில் நடித்த பார்வதி, மாளவிகா மோகனன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், விக்ரம் பேசியதாவது, “பொன்னியின் செல்வன் படத்தில் வீரம், வெற்றி, தோல்வி என 1000 வருஷத்திற்கு முன்னால் நடந்ததை பேசியிருந்தோம். அதன் பிறகு இந்தியாவில் 200 வருடத்திற்கு முன்பு வறுமையில் இருந்துள்ளோம், கஷ்டப்பட்டுளோம் என்பதை மையமாக வைத்து பா.ரஞ்சித் படம் இயக்கியுள்ளார். அதை ட்ரைலரில் பார்க்கும்போது உங்களுக்கு தெரிந்திருக்கும், இந்த மாதிரி ஒரு சக்தி வாய்ந்த கதை மக்களிடம் ஜனரஞ்சகமாக போய் சேரும்.
இந்த படத்தின் ட்ரைலரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதில், ஜி.வி.பிரகாஷின் இசை சிறப்பாக இருக்கிறது. இப்படத்தின் பாட்டைவிட அதில் வரும் ஒவ்வொரு நோட்ஸையும் ரசித்து கேட்டேன். அவரும் இந்த படத்தில் ஒரு கதாநாயகன்தான். விருதுகள் எல்லாம் அவர் நிறைய வாங்கியுள்ளார். ஆனால், இந்த படத்திற்கு பிறகு உலக ரீதியில் பெரிய ஆளாக மாறுவார் என்று தோன்றுகிறது. சொல்ல முடியாது அவரின் அங்கிள்-க்கு ஆஸ்கர் வந்ததுபோல் இவருக்கும் ஆஸ்கர் வரலாம். இது நடந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
பா. ரஞ்சித் எனக்கு பயங்கரமான படம், கதாபாத்திரம், கதையமைப்பு எல்லாம் கொடுத்தார். ஆனால், அதற்கு அவர் மிகவும் கஷ்டப்பட்டார், அதை என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு நாளும், ஒங்வொரு ஷாட்டுக்கும் என்ன பண்ணலாம் என்று தலைய பிச்சுகிட்டு உட்கார்ந்திருப்பார். அவரின் கிராஃப்ட்-டை தாண்டி, படப்பிடிப்பு தளத்தில் எங்களிடம் கணிவாக பேசுவார். ஆனால், அவர் பேச்சில் ஒரு சூடு வந்ததும் கடகட என்று பேசுவார். அவர் பேசுதை எப்போது கேட்டாலும் உற்சாகமாக இருக்கும். இந்த படத்திற்கு பிறகு, இதில் நடித்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் இருக்கும். மேலும் அவர்கள் சிறந்த கலைஞராக மாறுவார்கள், அதற்காக நன்றி ரஞ்சித்” என்றார்.