
ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இறைவன்'. இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வருகிற 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி, அ. வினோத் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் விஜய்சேதுபதி பேசுகையில், "அஹ்மது சார் மிகவும் தன்மையானவர். அவரிடம் இருந்து இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவில்லை. படத்தின் டைட்டில்கள் அழகாக வைக்கிறார். இறைவன் என்பது நம்பிக்கையான வார்த்தை. ஆனால், அதை இப்படி பயமுறுத்தி ஆர்வத்தோடு கொடுத்துள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பயமுறுத்தினாலும் பார்ப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். 'எம். குமரன்' படத்தில் நதியா மேம் ரவிக்கு அறிமுகம் கொடுக்கும் போது நானும் அங்கு நின்றிருப்பேன். அந்தப் படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பார்கள்.
அதன் பிறகு நானும் ஜெயம் ரவியும் இணைந்து நடிக்க என்னிடம் கதை கூறினார்கள். நான் அவருடன் நடிக்க மறுத்துவிட்டேன். போகன் படத்தில் நடிப்பதாக இருந்தது. அப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் பண்ண முடியவில்லை. அதன் பிறகு நானும் ஜெயம் ரவியும் ஒரு பார்ட்டியில், சேர்ந்து நடிப்பதை பற்றி ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்ணினோம். அவருடன் நடிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் பார்க்கலாம்" என்றார்.