Skip to main content

"கிறிஸ்துமஸ் முன்னதாகவே வருகிறது" - விஜய் சேதுபதி

 

vijay sethupathi merry christmas movie new release date update

 

தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, இந்தியில் 'மும்பைக்கார்' படத்தையடுத்து ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் ஆயிரம் கோடியை கடந்து வசூல் சாதனை நடத்தி வருகிறது. மேலும் மௌன படமான 'காந்தி டாக்கீஸ்', தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கும் புது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

 

இதனிடையே பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகை ராதிகா அப்தே முக்கியமான கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு கிறுஸ்துமஸை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை. 

 

பின்பு இந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தாண்டு டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, "கிறிஸ்துமஸ் இந்த ஆண்டும் முன்னதாகவே வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.