vijay sethupathi about Villain roles

Advertisment

விஜய் சேதுபதி தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கத்தில் புது படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். தமிழை தாண்டி, இந்தியில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் 2024ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இதனிடையே கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கியுள்ள மவுன படமான ‘காந்தி டாக்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். அதிதி ராவ், அரவிந்த சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் அண்மையில் கோவாவில் நடந்து முடிந்த இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக படக்குழுவுடன் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி, வில்லன் கதாபாத்திரங்களில் சிறிது காலம் நடிக்க போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அவர் பேசுகையில், “ஹீரோக்கள் பல முறை கேட்டுக்கொண்டதால் தான் வில்லன்கதாபாத்திரங்களில் நடித்தேன். இனி நடிக்க போவதில்லை. அதில் எமோஷனலாக நிறைய அழுத்தங்கள் தரப்படுகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. ஹீரோவின் இமேஜை மிஞ்சிவிடாமல் குறைத்து நடிக்க சொல்வார்கள். வில்லனாக நான் நடித்த நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கியும் இருக்கிறார்கள். அதனால் சிறிது காலம் வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்” என்றார்.

Advertisment

விஜய் சேதுபதி, ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம், ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட பெரிய ஹீரோக்கள் படங்களில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.