Skip to main content

எப்போதும் அஜித் செய்வதை இப்போது விஜய் செய்துள்ளார்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

vijay and ajith

 

 

2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அஜித் ரசிகர்கள் மிகவும் குஷியாக பல கனவுகளுடன் அஜித்தின் பிறந்தநாளை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், அவருடைய பிறந்தநாள் ட்ரீட்டாக வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைஞர் பட்டாளத்துடன் அஜித் இணைந்து நடித்த 50வது படம் மங்காத்தா-வும் ரிலீஸாக இருந்தது. அப்போது அஜித் தலைமையின் கீழ் இயங்கி வந்த அஜித் நற்பணி மன்றம், அஜித்திற்கு பெரும் சர்ப்ரைஸ் தருவதாக நினைத்து, அவருக்கு ஒவ்வாத விஷயங்களை செய்துவந்தது. அரசியல் கட்சிகளையே மெய் சிலிர்க்க வைக்கும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக மேடை அமைத்து மதுரையில் பிறந்தநாள் விழா கொண்டாட நினைத்தது. இதனை தொடர்ந்து மதுரையை சேர்ந்த பெரும் அரசியல்வாதிகளுடனும் இணைந்து அஜித் ரசிகர்கள் செயல்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. அதுவரை மௌனம் காத்து வந்த அஜித், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த விழாவை நடத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியாகியிருக்கும் என்று சிலர் எதிர்பார்க்கையில், ரசிகர் நற்பணி மன்றத்தையே கலைத்து, அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் அஜித்.

 

அஜித் பிறந்தநாளான மே 1 அன்று ‘மங்காத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு, தள்ளிப்போன நிலையில், ஏப்ரல் 29 ஆம் தேதி ரசிகர் மன்றம் குறித்த தனது முடிவை ரசிகர்களுக்கு தெரிவித்தார். அதில், “ கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நலப் பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து” என்று தனது ரசிகர்களுக்கு புரியும் அளவிற்கு தெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவித்தார். 

 

இதன்பின்பும், அரசியல் சம்மந்தமாக இதுவரை எந்த கருத்தும் தெரிவித்தது இல்லை. ஆனால், தனது ஜனநாயகக் கடமைகளை சரியாக நிறைவேற்றி வருகிறார். இயக்குனர் பாலாவுக்கும் அவருக்கும் நடைபெற்ற பிரச்சனையில், அஜித்திற்காக பாலாவின் அலுவலகத்தின் முன் கூடிய கூட்டத்தையும் தனக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் விலகினார். ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அஜித்தின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை அனைவரும் தெரிந்துக்கொள்ள பாஜக ஒரு சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தது. அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் திருப்பூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அஜித் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்ட நான்கு இளைஞர்கள், தமிழிசை தலைமையில் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அதன்பிறகு பேசிய தமிழிசை, அஜித் ரசிகர்கள் பலரும் தாமரை தமிழகத்தில் மலர பாஜகவில் இணைய வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். 

 

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த, பல வருடங்களுக்குப் பிறகு அஜித் தனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் அரசியல் குறித்தான தனது நிலைப்பாட்டை உணர்த்த, அடுத்த நாள் (21-01-2019) அறிக்கையை வெளியிட்டார். அதில், “நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த, திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம், சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான், என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது என்று நான் சிந்தித்ததின் விளைவான முடிவு அது” என்று தெரிவித்தார். அஜித்தின் அறிக்கையின் கீழே  “வாழு! வாழவிடு!” என்கிற வசனத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் சிலாகித்தனர். உண்மையிலேயே ஒவ்வொரு ரசிகருக்கும் அரசியல் புரிதல், நிலைப்பாடு என்பது உண்டு. ஆனால், அதை வைத்து பலரும் அரசியல் வியாபாரம் செய்து வருவதை தடுக்க அந்த ரசிகர் விரும்பும் நாயகனின் நிலைப்பாடுதான் அவசியம். அந்த நிலைப்பாட்டை தனது ரசிகர்களுக்கு உணர்த்த எப்போதும் மௌனமாக இருக்கும் அஜித், வலுவான அறிக்கையின் மூலம் மறுப்பு தெரிவித்தார். 

 

இப்படி அஜித் போல மறுப்பு தெரிவிக்க வேண்டிய நிலை தற்போது விஜய்க்கும் வந்துவிட்டது. நேற்று மதியம் விஜய் தனது கட்சியை பதிவு செய்துவிட்டார் என்று ஒரு தகவல் காட்டுத் தீ போல பரவ, விஜய் தரப்பில் ‘அது பொய்’ என்று பதில் வந்தது. அடுத்த கொஞ்ச நேரத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி, ‘நான்தான் அதை பதிவு செய்தேன்’ என்று தெரிவித்தார். இதன்பின் அவசர அவசரமாக விஜய் தரப்பிலிருந்து, ஒரு செய்தி அறிக்கை வெளியானது. அதில் தனக்கும் அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை எனவும், மக்கள் இயக்கத்தில் இருப்பவர்கள் அதில் சேர வேண்டாம், மீறி சேர்ந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் விஜய், அஜித் பாணியில் மறுப்பு தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்