மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.
சஞ்சய் மஞ்சுரேக்கர் உலகக்கோப்பை தொடக்கத்திலிருந்தே எதிர்மறையான கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்கிவந்தார். அதிலும் குறிப்பாக தோனி மற்றும் ஜடேஜாவை மிகவும் மோசமாக விமர்சித்தார். இது டிவியில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த எரிச்சலை தந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த மேட்ச் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன், “நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் சஞ்சய் மஞ்சுரேக்கர். ஆனால் உண்மையில் ஜெயித்தது நீங்கள் அல்ல உங்களுடைய எதிர்மறை சிந்தனை, உங்கள் பிரார்த்தனைகள் கடைசியில் வென்றுவிட்டன. நியூஸிலாந்து அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போது நீங்கள்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் நீங்கள் தோற்கடித்தது உலகின் மிகச் சிறந்த அணியை. உலகக் கோப்பை தொடர்ந்து முழுவதுமே சிறப்பான பொழுதுபோக்கைப் படைத்த இந்திய அணிக்கு நன்றி.
தோனி மீண்டும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என நினைத்தோம். ஆனாலும் பரவாயில்லை தோனி, நீங்கள் எங்களுக்காக நிறைய செய்துவிட்டீர்கள். உங்களை நினைத்து அசைபோட நிறைய நல்ல தருணங்கள் இருக்கின்றனர். அதனால் நேற்றைய ஆட்டத்துக்காக வருந்தாதீர்கள்.உங்களிடம் முன்வைக்க ஒரே ஒரு கோரிக்கை மட்டும் இருக்கிறது. நீங்கள் ஓய்வு பெறவிருப்பதாக வெளியாகும் யூகங்கள் யூகங்களாகவே இருக்கட்டும். 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம். விளையாடிக் கொண்டே இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.