வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி தெலுங்கில் வெளியான இப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் இன்று (28.04.2023) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் இதுவரை வெளியாகாத டைரக்டர்ஸ் கட் காட்சிகளைக் கூடுதலாக இணைத்துள்ளது படக்குழு. இது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “விடுதலை படத்தின் மீது ரசிகர்கள் பொழிந்த அன்பு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. இந்தத் திரைப்படத்திற்கான எதிர்வினைகள் ஊக்கமளிப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் இருந்தது. இதில் நான் வெளிப்படுத்தியிருக்கும் எனது கண்ணோட்டத்துக்கு ஆதரவளித்து தங்களை முழுமையாக அர்ப்பணித்த எனது நடிகர்கள் மற்றும் திரைப்படக் குழுவினர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஓடிடியில் டைரக்டர்ஸ் கட் காட்சிகளையும் உங்கள் திரைக்குக் கூடுதலாகக் கொண்டு வருவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
நடிகர் சூரி கூறுகையில், “வெற்றிமாறன் சார் தனிப்பட்ட முறையில் ஒரு நிறுவனமாகத் திகழ்கிறார். அனைத்து நடிகர்களும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள். ஆகவே விடுதலை படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, அது எனது வாழ்க்கையை புரட்டிப்போடும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை முன்கூட்டியே நான் அறிந்தேன்" என்றார்.