சென்னையில் திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிங்கம் புலி, ஆர்.பி. உதயகுமார் நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் பேசிய வெற்றிமாறன், “சினிமாவுல என்ன தப்பு வேணாலும் சூட்டிங் ஸ்பாட்ல பண்ணலாம். அதை எடிட்டிங்ல கரக்ட் பண்ணிட முடியும் என்கிற தைரியம் எனக்கு எப்போது இருக்கு. என்னை மாதிரி ஸ்டைல்ல படம் எடுக்குறவங்களுக்கு எடிட்டிங் ரூம் ஸ்ட்ராங்கா இல்லனா என் படம்லாம் வெளியவே வராது. அதுக்கு காரணம், நான் இரண்டு மிக சிறந்த எடிட்டர்களோடு வேலை பார்த்தது தான். ஒருவர் பாலு மகேந்திரா. நிறைய பேர் அவருடைய ஒளிப்பதிவு பத்தி பேசுவாங்க, இல்லனா ரைட்டிங் பத்தி பேசுவாங்க.
ஆனால், நான் அவர் பக்கத்தில் இருந்து பார்த்ததில், அவருடைய மத்த திறமைய காட்டிலும் அவர் ஒரு தலைசிறந்து எடிட்டர். அவரிடம் வேலை பார்த்த உதவி இயக்குநர்கள் எல்லோருக்கும் எடிட்டிங் அறிவு கொஞ்சம் இருக்கும். என்னுடைய முதல் படத்தில் இருந்து எடிட்டர் என்கூடவே இருந்து என் படங்கள உருவாக்குறாங்க. இந்த இடத்துல என்னுடைய இடம் இருக்கனும்னு நினைச்சு இங்கு வந்துருக்கேன்” என்று கூறினார்.