Skip to main content

"எது வேண்டுமானாலும் நடக்கும் -பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோம்"  -வெற்றிமாறன் பிரஸ் மீட்

Published on 24/11/2020 | Edited on 24/11/2020
vetri

 

 

மைம் கோபி, சுரேஷ் ரவி, ரவீணா ஆகியோர் நடித்துள்ள படம் காவல்துறை உங்கள் நண்பன். பி.ஆர். டாக்கீஸ் மற்றும் வொய்ட்  மூன் டாக்கீஸ்  இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.

 

காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து, நேற்று படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட வெற்றிமாறன், காவல்துறை மீதான விமர்சனங்கள் குறித்தும் அதை எப்படி பார்க்கவேண்டும் என்பது குறித்தும் பேசினார்.

 

இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது:- 

 

"எல்லோருக்கும் வணக்கம். இந்த படத்தில் கடைசியாக இணைந்தது நான்தான். சுஷ்மா என்பவர் என்னை அழைத்து, நாங்கள் ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறோம். நீங்கள் அதை பார்த்து, படத்தை வெளியிட்டால் எங்களுக்கு ஒரு பலமாக இருக்கும் என்றார். நானும் படத்தை பார்த்தேன். படத்தை பார்த்தவுடன், அந்த படத்தோடும், படத்தின் கதாபாத்திரங்களோடும் என்னால் ஒத்துப்போக முடிந்தது. அந்த கதாபாத்திரங்களின் பதற்றம், பிரச்சனைகளின் உள்ளே என்னால் இருக்க முடிந்தது. ஒரு படத்தை பார்க்கும்போது, அந்த பாத்திரங்களின் பிரச்சனைகள் நம் பிரச்சனைகளாக மாற வேண்டும். அது மிகவும் முக்கியம். இப்படத்தில், அவர்களுடைய பிரச்சனைதான் நம் பிரச்சனை. நம்முடைய பிரச்னை தான் அந்த கதாபாத்திரங்களின்  பிரச்சனை. மிடில் கிளாஸாக இருப்பவர்களுக்கு, எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பாதுகாப்பற்ற  சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம் என்பதை  அழுத்தமாக சொன்னது போல் இருந்தது. 

 

இந்த படத்தில், என் பெயர் இருப்பதை மரியாதைக்குரிய விஷயமாக  கருதுகிறேன். ஒரு படத்தில், ஒரு பெயர் இருப்பதால், மக்கள் படத்தை பார்ப்பார்களா என தெரியாது. படம் நல்ல தரத்தோடு இருந்தால் மக்கள் படத்தை பார்ப்பார்கள், பாராட்டுவார்கள். காவல்துறை உங்கள் நண்பன் மாதிரியான படங்கள்,  காவல்துறை மீதான விமர்சனம் என்பதைவிட, அந்த அமைப்பில் இருக்கும் ஒரு சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டி, அந்த அமைப்புக்கும் மக்களும் இடையேயான வித்தியாசத்தை குறைக்கும் ஒன்றாகத்தான் பார்க்கவேண்டும் என கருதுகிறேன். காவல்துறை மீது தொடர்ந்து  விமர்சனங்கள் சினிமாவில் வருகிறெதென்றால், அது நாம் அன்றாடம் பார்க்கும் விஷயங்களின் வெளிப்பாடாகவே திரையில் வருகிறது. அந்த அடிப்படைலதான், இந்த படத்தில் வருவது எல்லாமுமே, நாம் எதோ ஒரு இடத்தில் பார்த்ததாகவே இருக்கிறது.

 

இந்த படத்தில் கேள்வி கேட்கும்போது, நமக்கு சரியென்று, நாம் செய்வது அந்த அமைப்புக்கு (காவல்துறை) எவ்வளவு பிரச்சனையாக மாறுகிறது என்பதை, இரண்டு மூன்று கதாபாத்திரங்களை வைத்து நன்றாக காட்டிருக்கிறார்கள். இப்படத்தின் கரு மீது படக்குழு வைத்திருந்த நம்பிக்கை, இதனை மக்களுக்கு அளிக்கக்கூடிய, நல்ல படமாக  மாற்றியிருக்கிறது. இது ஒரு மரியாதையான முயற்சி, இதை மக்களிடம் எடுத்து செல்ல ஊடகங்கள் உதவவேண்டும். நன்றி" இவ்வாறு வெற்றிமாறன் உரையாற்றினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திரைத்துறைக்கே நல்லது கிடையாது” - நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த வெற்றிமாறன்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Vetrimaran who supports Nayanthara for annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என்று கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“குறைகளோடும் தவறுகளோடும் தான் படம் எடுக்கிறோம்” - மனம் திறந்த வெற்றிமாறன்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vetrimaaran speech in  CIFF

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர்த்தொழில், விக்ரம் சுகுமாரனின் ராவணக் கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. விருது வாங்கிவிட்டு மேடையில் பேசிய வெற்றிமாறன், “எப்போதுமே இது மாதிரியான படங்கள் எடுக்கும்போது ஒரு பேலன்ஸ் இருக்கணும். சில இடங்களில் கதையில் சமரசம் பண்ணிப்போம். சில இடங்களில் ஜனரஞ்சகத்தன்மைக்காக சமரசம் செய்துகொள்வோம். என்னுடைய படங்களில் நிறைய சீன்களில் டப்பிங் சரியாக இருக்காது. ஆனால் எல்லா படங்களையுமே நிறைய குறைகளோடும் தவறுகளோடும் தான் எடுத்து முடிக்கிறோம். இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறார்கள். அதே சமயம் கதையின் நோக்கம் படத்தின் குறைகளை மறக்கடிக்க செய்கிறது.  

இது மாதிரி கதையாடல்கள் சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழ்த்தும் என்ற நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்காகத்தான் இந்த அங்கீகாரம் என நினைக்கிறேன். அடுத்தடுத்து செய்யும் முயற்சிகளில் சமரசங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் சரியாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். விடுதலை மாதிரியான படத்திற்கு ஜனரஞ்சகமான ஆதரவும் திரைப்பட விழாக்களின் அங்கீகாரமும் பெரிய ஊக்கமளிக்கிறது. நோக்கம் பத்தி பேசும்போது அயோத்தி பத்தி பேச வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தொடர்புபடுத்தி கொள்ளக்கூடிய ஒன்று. கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் ஒரு நல்ல நோக்கத்தோடு வந்த படம். அந்த இயக்குநரின் நோக்கத்தை ஆதரித்த மொத்த படக்குழுவிற்கும் பாராட்டுக்கள்” என்றார்.