Skip to main content

"தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளாத ஒரு மனிதர்" - கலைஞர் குறித்து வெற்றிமாறன்

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

vetrimaaran about kalaignar

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை மேற்கு பகுதி திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, 'முன்னணி இயக்குநர்கள் பார்வையில் தமிழ்நாட்டின் இயக்கம் டாக்டர் கலைஞர்' என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், வி.சி. குகநாதன், தங்கர்பச்சான், வெற்றிமாறன், ராஜுமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "ஒரு சினிமா மாணவனாக கலைஞருடைய படங்கள், தமிழ் சினிமாவுக்குள்ளும் தமிழ் சமூகத்துக்குள்ளும் என்ன தாக்கம் ஏற்படுத்தியது என்பதை என்னுடைய புரிதலில் இருந்து பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். எல்லாரும் போல பராசக்தி படத்திலிருந்து தான் தொடங்க போறேன். அதற்கு முன்பாக எடிட்டர் விஜயன் சார் சொன்ன ரெண்டு மூணு விஷயங்களை சொல்கிறேன். நான் உதவி இயக்குநராக இருந்தபோது விஜயன் சார் கலைஞருடைய படங்களுக்கு எடிட்டிங் செய்து கொண்டு இருந்தார். ஒரு ஷாட் எவ்வளவு தூரம் இருக்கணும், அப்படி இருந்தால் எவ்வளவு நேரம் பார்க்க முடியும், எந்த அளவை தாண்டினால் பார்வையாளர்கள் பார்க்க முடியாது என்பது இயக்குநருக்கும் எடிட்டருக்கும் தெரிஞ்ச விஷயங்கள். ஒரு வசனம் இங்க இருந்தா சரியா இருக்கும், இல்லைன்னா சரியா இருக்கும் என அனுமானிக்கிறது. அந்த கணிப்பு இருவருக்குமே அத்தியாவசியம். ஒளிப்பதிவாளர்களுக்கே அது கை வராத ஒன்று. 

 

இந்த விஷயம் எப்போதுமே டைலாக் ரைட்டர்ஸுக்கு இருக்காது. அவர்கள் எழுதிய வசனம் எல்லாமே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் கலைஞர் ஐயா, இந்த வசனத்தை தூக்குங்கள், அந்த வசனம் வேண்டாம் என சொல்லுவார் போல. அப்படி ஒரு நாள் எடிட் செய்து கொண்டிருந்தபோது அவசரமாக அவரை வேறொரு வேலைக்காக கூட்டிட்டு போய்ட்டாங்க. அவர் 1 மணி நேரத்தில் வந்துடறேன் என சொல்லிவிட்டு கிளம்பி கோட்டைக்கு போய்விட்டார். வெயிட் பண்ணிக்கிட்டே இருக்காங்க. லன்ச் டைம் ஆகிடுச்சு. ஆனால் வேலை நடந்துக்கிட்டே இருக்கு. பிறகு கலைஞர் வந்தார். வீட்டுக்கு கூட போகாம நேரா அங்க வந்திட்டு, விஜயன் சாரை கூப்பிட்டு, 'சாரி விஜயன்... உன்ன வெயிட் பண்ண வச்சிட்டேன். தப்பா எடுத்துக்காத ' என்றார். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அவர் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த இடத்தில ஒரு முதலமைச்சராக இல்லாமல், ஒரு எழுத்தாளராக அவருடைய வேலையை செய்தார். அப்புறம் மன்னிப்பு கேட்டு பட வேலைகளை பார்த்தார். 

 

பார்த்துக்கொண்டே வந்தவர் ஒரு இடத்துல நிறுத்தி, இந்த இடத்தில் அதிகமா இருக்கே, குறைக்க சொன்னனே. அதை பண்ணவில்லையா என கேட்டாராம். இந்த மெம்மரி, அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் படத்தின் மீது உள்ள ஆர்வம். தங்கர் பச்சான் சார் சொன்ன மாதிரி, விஜயன் சார் கிட்ட நிறைய நேரங்கள் செலவழித்தாராம். அவருடைய எழுத்து அவருடைய படம் என்னவா வந்திருக்கும் என்பது அவ்வளவு சிறப்பா இருக்கும் என நினைக்கிறேன். இதேபோல், அவர் வசனம் எழுதிய படம், எடிட்டிங் எல்லாம் முடிச்சு திரையரங்கில் ஷோ பாக்குறாங்க. கலைஞருக்கு பின்னால் ஒருத்தர் படம் பார்த்துக்கிட்டு இருக்கார். படம் முடிஞ்சு எல்லாம் வெளியே போய்ட்டாங்க. 3 பேர் மட்டும் உள்ள இருக்காங்க. கலைஞர் ஐயா, படம் எப்படி இருக்கு என கேட்க, பின்னாடி இருந்தவர் 'நல்லாருக்கு அண்ணே' என சொல்ல, உடனே கலைஞர் 'அப்போ நீ தூங்கிட்ட, இது நல்லாவா இருக்கு' என்றார். அவர் சார்ந்த படம் என்பதற்காக நல்லா இல்லாததை நல்லாயிருக்கு என்று தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளாத ஒரு மனிதர். அது ஒரு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கிறேன். 

 

அரசியல் என்று பார்க்கையில், ஒரு வீட்டில் உள்ள அரசியலையே நம்மால் சமாளிக்க முடியாது. ஆனால் அவரை சுற்றி ஆயிரம் தேவைகள், எதிர்பார்ப்புகள் என ஏகப்பட்டது இருக்கும். இதற்கு நடுவில் அரசியலை நகர்த்திக் கொண்டு போகிறது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு இந்த ஒரு தன்மை அவருக்கு இருந்தது தான் காரணம் என நினைக்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்ரோஷமும்... அன்பும்... - வெளியான விடுதலை 2 அப்டேட்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
vetrimaaran soori vijay sethupathi viduthalai 2 first look released

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராஜ் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் 5 நிமிடங்கள் கைத்தட்டி படக்குழுவினரை பாராட்டினர்.   


இந்த நிலையில், விடுதலை பாகம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் ஒன்றில் விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் அன்பாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மற்றொன்றில் ஆக்ரோஷமாக கையில் கத்தியுடன் விஜய் சேதுபதி மட்டும் இடம் பெறுகிறார். கதை நாயகனான சூரி இரண்டு போஸ்டரிலும் இடம் பெறவில்லை. முன்னதாக சூரியை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் இரண்டாம் பாகத்தில் அதிகம் இடம் பெறும் என வெற்றிமாறன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போஸ்டரில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

இரா.சம்பந்தன் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (வயது 91) காலமானார். உடல்நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இரா.சம்பந்தன் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன். இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார். செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் போராடி வந்தார். இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் அவர்கள் பேணி வந்தார். கலைஞரின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

2015ஆம் ஆண்டில் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கத்திற்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது’ என்று கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு 13ஆவது முறையாகத் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பந்தனும், ‘இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்திருந்தார். ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தனின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.