Skip to main content

“ஜெயிலர் 2 வேண்டாம் என நெல்சன் சொன்னார். ஆனால்...” - வசந்த் ரவி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vasanth ravi about jailer 2

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நாளை(ஏப்ரல் 18) வசந்த் ரவி பிறந்தநாள் காண்கிறார். இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
  
அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்களா?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்றுதான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

‘ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் , ‘பார்ட் 2க்கான லீட் இருக்கு சார் என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“வேதனை, வருத்தம்” - வசந்த் ரவி புலம்பல்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
vasanth ravi about pon Ondru Kanden World Satellite Premiere announcement

தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வசந்த் ரவி. இதையடுத்து வெப்பன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.  

இதனிடையே கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதில் அசோக் செல்வன், மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு தனியார் தொலைக்காட்சி பட ப்ரோமோவை வெளியிட்டது. அதில் திரையரங்கிற்கு முன் சின்னத்திரையில் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.  

இந்த நிலையில் வசந்த் ரவி, எங்களிடம் தொடர்பு கொள்ளாமல் சின்னத்திரையில் வெளியாவது குறித்து தனியார் தொலைக்காட்சி புரோமோ வெளியிட்டது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டூடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு. அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ப்ரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் பொன் ஒன்று கண்டேன் பட ப்ரோமோவையும் சின்னத்திரையில் வெளியாகவுள்ள அறிவிப்பையும், பார்ப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. இந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது. படக்குழுவிற்கு இது பற்றி சுத்தமாக தெரியவில்லை.

நடிகர்களுக்கு தயாரிப்பாளரின் வணிக ரீதியாக எடுக்கும் முடிவுகளில் கருத்து சொல்ல உரிமை இல்லை. ஆனால், அவர்களுக்கு இது போன்ற அறிவிப்புகளை குறைந்தபட்ச மரியாதையாக தெரியப்படுத்துங்கள். இது போல் சமூக வலைத்தளங்கள் மூலமாக அல்ல” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சில மணி நேரங்களில் பட ப்ரோமோவை அந்த தனியார் தொலைகாட்சி நீக்கியுள்ளது. 

Next Story

ரஜினியுடன் மீண்டும் நடிக்கும் நயன்தாரா

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
nayanthara in rajini jailer 2

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். வருகிற ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 நடிக்க ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே தனது 172வது படத்திற்காக மாரி செல்வராஜுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரஜினியுடன் சந்திரமுகி, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கும் குசேலன் படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.