Skip to main content

வீரப்பன் பட ஆய்வுக்காக சென்றபோது கர்நாடகா மக்கள் பகிர்ந்த சம்பவம் - வசந்த் பாலகிருஷ்ணன்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Vasanth Balakrishnan | Koose Munisamy Veerappan | ZEE5

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. 

டாக்குமெண்டரி உருவாக்கத்திற்காக வீரப்பன் வாழ்ந்த காடுகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பல ஆய்வுகளைச் செய்தவரும், டாக்குமெண்டரி உருவாக்கத்தில் மூவரில் ஒருவராகப் பணியாற்றிய வசந்த் பாலகிருஷ்ணன் பேசியதாவது, “வீரப்பன் என்று யூடியூப்பில் தேடினால் இன்றும் 500 வீடியோ வரும். அவ்வளவு டாக்குமெண்டரி இருக்கு, படங்கள் வந்திருக்கு. அத்தனையையும் தாண்டி இந்த டாக்குமெண்டரி எதற்கு என்றால் வீரப்பனைப் பற்றி சொல்ல அத்தனை கதைகள் அதிலிருக்கிறது. வீரம், இரத்தம், துரோகம், வலிமை, கொடுமை, நகைச்சுவை வீரப்பனின் கதையில் இருக்கிறது. இதுவரை சொல்லப்பட்டது மிகக் குறைவே. அதைத் தாண்டி அவ்வளவு விசயங்கள் இருக்கிறது. நக்கீரன் 1993 மற்றும் 1996 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பேட்டிகள், படங்கள்தான் இதற்கெல்லாம் அடிப்படையாகும். இது பத்திரிகை துறையில் நடந்த பெரிய சாதனை.

“எங்களோட ஆசிரியர் நக்கீரன் கோபால் சொன்னாரு... எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க, இந்த படைப்பு முழுமையாக, நேர்மையாக வர வேண்டும். அப்படி செய்ய முடிஞ்சா செய்யுங்க என்றார். உலகின் எந்த ஹீரோவோடும், வில்லனோடும் பொருத்திப் பார்க்கக்கூடிய பண்பு நலன்கள் கொண்டவர் வீரப்பன். அதனாலேயே அவருடைய கேரக்டரை சொல்லணும்னு நினைத்தோம். வீரப்பன் வாழ்ந்த காலத்திலிருந்த மக்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். போலீஸ் வெர்சனின் பல கதைகளின் உண்மையை சொன்னது நக்கீரன். அதனாலேயே வீரப்பனைப் பற்றியும், அந்த மக்களைப் பற்றியும் நக்கீரன்தான் சொல்ல முடியும். படைப்புகள் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்படும். அப்படி விவாதத்தை உண்டாக்குகிற படைப்புகள் மேன்மையானவை. அந்த வகையில் கூச முனுசாமி வீரப்பன் ஒரு முக்கிய படைப்பாகும்” என்றார்.

இந்த படைப்பின் ஆராய்ச்சிக்காக சென்றபோது சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தினை வசந்த பாலகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். அதாவது, “கர்நாடகா அருகே புளிஞ்சூர் கிராமத்தில் வீரப்பனை காட்டிக் கொடுத்தவர்களை விசாரித்து கொல்வதற்காக வந்திருந்தபோது மலை அடிவாரத்தில் ஒரு எல்லையில் வீரப்பன் விசாரிக்கிறார் என்றால், அதன் மற்றொரு எல்லைக்கு மக்கள் பதறியடித்து ஓடுகிறார்கள். அப்போது ஒரு குழந்தை கூட்டத்தில் மிதிப்பட்டு செத்துப் போனது. இதுபோன்று பல உயிர்கள் இறந்து போயிருக்கிறது. காவல்துறையால் பல உயிரிழப்புகள் நடந்தாலும் வீரப்பனாலும் அந்த மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இரண்டையுமே சொல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். அதை சிறப்பாக செய்திருப்பதாக நம்புகிறோம்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 10/04/2024

 

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாக காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சடை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

 

Next Story

சிறந்த ஆவணப்படத் தொடர் விருது வென்ற ‘கூச முனுசாமி வீரப்பன்’

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
koose munisamy veerappan wins best documentry series award

தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பில் பிரபாவதி ஆர்.வி. தயாரிப்பில் வீரப்பன் நக்கீரனுக்கு பேசிய பிரத்யேக பேட்டிகளைக் கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி மற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கியிருந்த இந்த சீரிஸிற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருந்தார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த சீரிஸில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்ந்திருந்தனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த சீரிஸ் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் ரஜினி, சிம்பு, கார்த்திக் சுப்புராஜ், சேரன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் படக்குழுவைப் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், இந்த சீரிஸ் சிறந்த ஆவணத் தொடருக்கான எடிசன் விருது வென்றுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் நடந்த 16வது ஆண்டு எடிசன் விருது விழாவில், சிறந்த ஆவணத் தொடருக்கான எடிசன் விருதை இயக்குநர் மற்றும் நடிகர் பாரதிராஜா படக்குழுவினருக்கு வழங்கினார். அவரிடமிருந்து நக்கீரன் ஆசிரியர், பிரபாவதி, ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் மற்றும் ஷரத் ஜோதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.