விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக காட்சி இடம்பெற்றது. மத வெறுப்பை தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கேரளா மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நேற்று (05.05.2023) இப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் இப்படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தீவிர சோதனைக்கு பிறகு தான் பார்வையாளர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர். நேற்று முதல் நாளில் இந்தியா முழுவதும் இப்படம் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இப்பட சர்ச்சை குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில், "இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது எல்லாருக்கும் உண்டு. அந்த சுதந்திரம் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அதை நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் சொல்லியிருக்காங்க. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் மறுத்துள்ளது. படங்களை படங்களாகப் பாருங்கள் என்று எத்தனையோ தடவை மாற்றுக்கட்சியினர் அறிவுறுத்தியிருக்காங்க. அதனால் நாங்களும் அதைத் தான் அவங்களுக்கு சொல்றோம்" என்றார்.