Skip to main content

புயல் பாதிப்பு - வைரமுத்து நிதியுதவி

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
a

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே திரைப் பிரபலங்கள் விஜய், சூர்யா, கார்த்தி, நயன்தாரா உள்ளிட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகப் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நாடு படக்குழுவினர், வெப்பன் படக்குழு, அன்னபூரணி படக்குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினர்.

இந்த நிலையில் வைரமுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி' எனும் ஆங்கிலக் கவிதை  நினைவின் இடுக்கில் கசிகிறது. வீட்டுக்குத் தண்ணீர் இல்லை
என்பது சிறுதுயரம்  வீட்டுக்குள்ளேயே தண்ணீர் என்பது பெருந்துயரம்.

விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன். என் கடமையின் அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன். பொருள்கொண்டோர்  அருள்கூர்க சக மனிதனின் துயரம் நம் துயரம் இடர் தொடராதிருக்க இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்” என பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்