Skip to main content

“கலைஞர் கையைப் பிடித்துக் கொண்ட உணர்வு” - வைரமுத்து நெகிழ்ச்சி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
vairamuthu about kalaignar memorial

சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 

இந்த நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்து வைரமுத்து நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன் 

கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத் 
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

‘இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்’

கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம்

நன்றி தளபதி” என குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“எறிகணைகள், கிழவியின் கூடையை உடைக்கின்றன” - வைரமுத்து 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vairamuthu about israel iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும் உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

vairamuthu about israel iran issue

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 

“இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன

உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது

உலகு தாங்காது

நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம்” என பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா தாக்குதல் குறித்து, “யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.