டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குபட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. மேலும் ‘சாமியே இல்லைனு ஊருக்குள்ள சுத்திட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தான நீ’ என்ற வசனம் இடம் பெற்றிருந்த நிலையில் அந்த வசனம் பெரியாரை விமர்சனம் செய்யும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சையானது. சந்தானமும் கடந்த பொங்கலன்று அந்த வசனத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் அது இன்னும் சர்ச்சையான பிறகு, அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியது படக்குழு. அப்போது இயக்குநர் கார்த்திக் யோகி பேசுகையில், “படப்பிடிப்பு ஆரம்பித்து எங்குமே பிரேக் விடவில்லை. ஒரே ஷெட்யூலில் மொத்தம் 63 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படத்தில் மக்கள் மனது புண்படும் படி ஒரு காட்சிகளும் இல்லை. அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. படம் பார்க்கும் போது அது மக்களுக்கு புரியும். அரசியல் பார்வை மட்டும் அதில் இருக்காது. முழுக்க முழுக்க பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்ட படம். சந்தானம் ட்வீட் போட்டது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பெரியாரை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இதுதொடர்பாக சந்தானம் ஆடியோ வெளியீட்டு விழாவில் விளக்கமளிப்பார்” என்றார்.