Skip to main content

'நாட்டு நாட்டு'க்கு குத்தாட்டம்; உக்ரைன் ராணுவ வீரர்கள் கொண்டாட்டம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Ukrainian Military Dancing RRR Naatu Naatu

 

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 'நாட்டு நாட்டு' பாடல் பலரது கவனத்தை ஈர்த்து திரைத்துறையில் உயரிய விருதுகளாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

 

இதனால் உலக அளவில் கவனம் பெற்ற இப்பாடலை பலரும் நடனமாடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இப்பாடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெஸ்லா நிறுவனம் தாங்கள் தயாரித்த கார்களின் மின் விளக்குகளை ஒளிர விட்டு 'நாட்டு நாட்டு' பாடலை ஒலிபரப்பு செய்தது. பிரபு தேவா அவரது நடன குழுவுடன் நடனமாடிய வீடியோ மற்றும் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மேன் அவரது ஊழியர்களுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ஜெர்மனி தூதர் நடனமாடியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இப்பாடலுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. இப்போது உக்ரைன் நாட்டு ராணுவ அதிகாரிகள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு வருடத்துக்கு மேலாக போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் ராஜமெளலி படம் எடுத்த புதிய பரிணாமம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
rajamouli rrr at japan

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில் ஜப்பானில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்ற ராஜமௌலி, சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு உரையாடினார். பின்பு அவருக்கு 83 வயது மூதாட்டி ஒருவர், 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். அந்த சிறப்பு பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜமௌலி, “இது விலைமதிப்பில்லாத பரிசு” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அங்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானிய பெண்கள் நாடகமாக அரங்கேற்றியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது எனக்கு பெருமை. படத்தைப் போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டு அந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் மட்டுமல்லாமல் ஆர்.ஆர்.ஆர் பட இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.