Skip to main content

சிவகார்த்திகேயனுடன் இணைந்த உக்ரைன் நடிகை!

Published on 21/03/2022 | Edited on 21/03/2022

 

ukrainian actress maria ryaboshapka female lead role sk20 film

 

நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் அயலான்' படம்  இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டான் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் எஸ்.கே 20 படத்தின் கதாநாயகி குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'எஸ்.கே 20' படத்தில்  உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மரியா ரியாபோஷாப்கா நடிக்கவுள்ளார். இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான 'ஸ்பெஷல் ஆப்ஸ்' இந்தி வெப் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காற்று அசைவதால் நமது கொடி பறக்காது” - நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயேன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
sivakarthikeyan about Major Mukund Varadarajan on his 10th passed away anniversary

கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமரன் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியது. 

இந்த நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் மறைந்து இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நாளில் இன்று காலையில் டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டுள்ள மேஜர் முகுந்த் வரதராஜன், நினைவு பலகைக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மலர் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரை நினைவுகூறும் விதமாக அவர் வாழ்க்கை கதை அடங்கிய சிறு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

மேலும் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “காற்று அசைவதால் நமது கொடி பறக்காது, அதைக் காத்து வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் இறுதி மூச்சிலும் பறக்கிறது” எனக் குறிப்பிட்டு அவர் மரியாதை செலுத்தும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார்.