Skip to main content

திருமணம் குறித்து விளக்கமா? - த்ரிஷா திடீர் பதிவு

 

trisha post viral

 

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, தற்போது விஜய்யின் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத் தவிர்த்து 'தி ரோட்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. இதுபோக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் தனுஷின் 50வது படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மலையாளம், தெலுங்கு என ஏகப்பட்ட படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

 

திரைத்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்து வரும் த்ரிஷா, திருமணம் குறித்த கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளிப்பார். சமீபத்திய பேட்டிகளில், நேரம் வரும்போது சொல்கிறேன் எனச் சொல்லி வந்தார். இதையடுத்து தற்போது பிரபல மலையாளத் தயாரிப்பாளருடன் அவருக்குத் திருமணம் நடக்கவுள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

 

இந்த சூழலில் த்ரிஷா திடீரென்று ஒரு பதிவை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "உங்களுக்கு நீங்கள் யார் என்று தெரியும்; உங்கள் அணியைப் பற்றியும் தெரியும்; அமைதியாக இருங்கள்; வதந்தியை பரப்பாதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வருண் என்ற தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் நடந்து பின்பு சில காரணங்களால் திருமணத்திற்கு முன்பே இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.