ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அம்மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்து, மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள், ட்ரொன்கள், ஹெலிகாப்டர் மூலம் அரசாங்கம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீட்பு பணிகள் குறித்தும் நிவாரண பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது தேசிய பேரிடராக இந்த வெள்ளத்தை அறிவித்து அதற்கான நிதியை தரவேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். இதனிடையே பலரும் ஆந்திர மற்றும் தெலங்கானா முதல்வர்களின் நிவாரண நிதிக்கு உதவி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ஆந்திரவுக்கு ரூ. 25 லட்சம் கொடுத்தனர். மேலும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் ஆந்திராவுக்கு ரூ.25 லட்சமும் தெலங்கானாவுக்கு ரூ. 50 லட்சமும் கொடுத்தனர். இதையடுத்து ஜுனியர் என்.டி.ஆர் இரு மாநிலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் கொடுத்தார். சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் வழங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரபாஸூம் இரண்டு மாநிலங்களின் முதல்வர் நிவாரன நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.