Skip to main content

மோதிக்கொள்பவர்கள் மத்தியில் ஒற்றுமையை வெளிப்படுத்திய அஜித் - விஜய் ரசிகர்கள்

 

thunivu varisu ajith vijay at same banner viral on social media

 

பொதுவாக ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகர்களின் படங்கள் வெளியானால் திரையரங்கிற்கு முன்பு பேனர் வைத்தும், அதற்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் திருவிழா போல கொண்டாடுவார்கள். குறிப்பாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஒரே சமயத்தில் வந்தால் போட்டி போட்டுக் கொண்டு பேனர்களும், போஸ்டர்களும் ஒட்டி வருவார்கள்.  

 

இந்த நிலையில் வரும் பொங்கலுக்குத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்களான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படம் ஒன்றாக வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இரு நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் விருப்ப நடிகர்களின் படங்களை வரவேற்க இப்போதிலிருந்தே போஸ்டர் பேனர் எனத் தயாராகி வருகின்றனர். 

 

அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள அஜித், விஜய் ரசிகர்களும் பல பேனர்கள் வைத்து வருகின்றனர். அதில் ஒன்றாக அஜித், விஜய் ரசிகர்கள் இருவரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பேனர் வைத்துள்ளனர். அதாவது புதுச்சேரி காமராஜர் சாலையில் 25அடி உயரத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' புகைப்படத்தை ஃபோட்டோஷாப் செய்து அஜித் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது போலவும் அதன் பின்னால் விஜய் அமர்ந்திருப்பது போன்றும் வாகன நம்பர் பிளேட்டில் தல - தளபதி என்ற வாசகத்தைக் குறிப்பிட்டும் வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்துள்ளனர். 

 

சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் இருவரும் மாறி மாறி கடுமையாகத் திட்டிக்கொள்வதும், தவறான கருத்துக்களைப் பகிர்வதுமாக இருந்து வருகின்றனர். இருப்பினும் சில ரசிகர்கள் நல்ல நட்போடவே பழகி வருகிறார்கள். களத்தில் பெரும்பாலும் ரசிகர்கள் அடித்துக் கொள்வதில்லை. ஆனால் முன்னதாகக் கடந்த 2014ஆம் ஆண்டு வீரம், ஜில்லா அந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஒரே தேதியில் வெளியான போது, சில திரையரங்குகளில் பேனர் வைப்பது தொடர்பாகவும், ரசிகர்களின் கொண்டாட்டம் தொடர்பாகவும் மோதல்கள் இருந்தன. 

 

இதையடுத்து 8 வருடங்கள் கழித்து இருவரின் படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதால் ஏதாவது மோதல்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் திரையரங்க உரிமையாளர்கள் இருக்கின்றனர். இந்த சூழலில் இருவரின் நட்பை வெளிப்படுத்தும் விதமாகப் புதுச்சேரி ரசிகர்கள் பேனர் வைத்துள்ளது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.