அருள்நிதி நடிப்பில் ராட்சசி பட இயக்குநர் கௌதமராஜ் இயக்கத்தில் ஜெயந்தி அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகியிருந்த படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கிராமத்துப் பின்னணியில் உருவாகி இருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டிருந்தது. மே மாதத்தின் இறுதியில் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது..
இந்நிலையில் இப்படத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் பார்த்துவிட்டு தன் கருத்தை தெரிவித்துள்ளார். “கழுவேத்தி மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன். நட்புக்காக உயிரையே கொடுப்பவன். நச்சரவான் எனில் தந்தையாயினும் தூக்கிலேற்றுபவன். அதிகாரவெறி ஆணவத்தைக் கழுவேற்றிக் கழிசடை சக்திகளுக்குப் பாடம் கற்பிப்பவன். சட்டம்-ஒழுங்கு எனும் பெயரால் எப்போதுமே ஆதிக்க வெறியர்களைப் பாதுகாக்கும் காக்கி அதிகாரிகளால் களப்பலி ஆனவன். 'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியை பெருங்குரலெடுத்துப் பேசுபவன். இயக்குநர் கௌதமராஜுக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.