மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14-ந் தேதி வெளியான படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஷங்கர், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
இந்நிலையில் திருமாவளவன் எம்.பி, படத்தை பார்த்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியது, "மிகவும் ஒரு வித்தியாசமான கதை அமைப்பு. கதை சொல்லியிருக்கிற முறை பாராட்டுதலுக்குரியது. அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கக் கூடிய வகையில் திரைக்கதை மிகச்சிறப்பாக பின்னப்பட்டிருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழக்கூடிய ஏழை எளிய மக்கள், குறிப்பாக கூவம் நதிக்கரை ஓரங்களில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், சென்னையிலிருந்து தொடர்ந்து அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிற பணிகளை நாம் அறிவோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னையின் மையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு புறநகர் பகுதிகளில் குடியேற்றப்பட்டு வருகிறார்கள்.
காலம் காலமாக குடியிருந்து வரும் பகுதியை விட்டு மக்கள் வெளியேற்றப்படும் போது புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஒரு நிலை ஏற்படுகிற போது அந்த மக்களின் உளவியல் என்னவாக இருக்கும் என்பதை சித்தரிக்கிற திரைப்படமாக மாவீரன் விளங்குகிறது. சென்னையில் பல இடங்களில் கூவம் நதிக்கரையில் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று அரசு சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருகிறது. அவர்களுக்கு மாற்று இடம் என்கிற பெயரில் அந்த வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அக்குடியிருப்புகளை உருவாக்கி தருகிற நிலையில் அதன் தரம் என்னவாக இருக்கிறது. அதில் அரசியல் எந்த அளவிற்கு தலையீடு செய்கிறது. அதனால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை திரைப்படத்தின் கருப்பொருளாக எடுத்துக் கொண்டு இயக்குநர் தன்னுடைய கற்பனை திறனை மூலதனமாக வைத்து மிகச்சிறப்பாக கதையை தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார். சிவகார்த்திகேயன் மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இணையாக அதிதி ஷங்கரும் மக்கள் மனம் கவரும் படி செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புகழ் பெற்ற திரைநட்சத்திரம் சரிதா இந்த படத்தில் தோன்றியிருப்பது மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகள் அப்புறப்படுத்தும் போது, நேரில் சென்று அந்த மக்களை ஆற்றுப்படுத்தியுள்ளேன் என்கிற முறையில் இந்த படத்தை பார்க்கிற போது நான் நேரடியாக அந்த களத்தில் நிற்பதை போன்ற உணர்வை பெற்றேன். சில இடங்களில் அந்த மக்களின் துயரத்தை எண்ணி கண்கலங்க நேர்ந்தது. காட்சி அமைப்புகள் அந்த அளவிற்கு உயிரோட்டமாக இருந்தது. பொதுவாக படத்தின் கதாநாயகர்கள் பெரிய ஆளுமை மிக்கவர்களாக காட்டப்படும்போது, இந்த படத்தில் கதாநாயகனை பயந்த சுபாவம் உள்ளவராக தொடக்கத்தில் இருந்து சித்தரிக்கிற இயக்குநர் ஒரு அசரீரி குரல் மூலம் கதாநாயகனை இயக்கும் காட்சி ஒவ்வொரு கட்டத்திலும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. கிளைமேக்ஸ் காட்சியில் மிஷ்கினை பார்த்து கதாநாயகன் கேள்வி எழுப்பும் காட்சி திரைப்படத்தின் குரலாக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களின் அவல குரலாக உள்ளது. அசரீரி குரல் மூலம் கதாநாயகன் இயக்கும் காட்சி என்பது ஒரு வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது.
கதாநாயகன் கூறியுள்ள வீரமே ஜெயம் ஒரு முக்கியமான முழக்கம். அதனால் கோழை செத்துவிட்டான். ஏழை உயிர்ப்பிக்கிறான். வீரம் என்பது மக்களை பாதுகாப்பதற்காக அதிகார வலிமையுள்ளவர்களை எதிர்ப்பதற்காக வெளிப்படுத்துகிற ஒரு உணர்ச்சி என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆயுதம் ஏந்துவது தான் வீரத்தின் அடையாளம் இல்லை. மக்களுக்காக துணிந்து குரல் கொடுக்கிற துணிச்சல் தான் வீரம். அத்தகைய வீரம் தான் வெற்றிக்கான அடிப்படை என்பதை இயக்குநர் மிக சிறப்பாக படத்தில் காண்பித்திருக்கிறார். படத்தில் காண்பித்துள்ள பிரச்சனைகள் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கவே செய்கிறது. இனிமேல் அவ்வாறு இருக்கக்கூடாது என்று அரசுக்கு மறைமுகமாக சொல்லும் வகையில் வசனங்கள் இருந்தது. இன்றைக்கு திரைப்படங்கள் ஆட்சியாளர்களை இயக்கக்கூடியதாக இருக்கிறது. அதற்கு இப்படமும் ஒரு சான்று. மக்களின் குரலை எதிரொலிப்பதன் மூலம் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு இது போய் சேரும் என்று நம்புகிறேன்" என்றார்.