Skip to main content

ரத்தம் தெறிக்கும் போஸ்டர் - தளபதி 67 புது அப்டேட்

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

thalapathy 67 title update

 

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்தது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டே வருகிறது.

 

இந்த வாரம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், தற்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலி கான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. மேலும் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

 

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (03.02.2023) மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது. இது விக்ரம் பட பாணியில் டைட்டில் டீசராக இருக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம், லியோ பட ஸ்டைலில் ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
lokesh kanagaraj rajinikanth movie thalaivar 171 title teaser update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார். 

Next Story

“நடித்ததற்கு 3 காரணங்கள் இருக்கின்றன” – லோகேஷ் கனகராஜ்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
lokesh kanagaraj shruthi hassan inimel album song press meet

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இனிமேல் ஆல்பம் நேற்று மாலை வெளியானது. இதையொட்டி பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பதிலளித்தனர். 

ஸ்ருதிஹாசன் பேசுகையில், “இனிமேல் பாடலை முதலில் நான் ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு சுழற்சியாக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் ஏற்ற இரக்கங்கள் இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என் அப்பா இதற்குள் வந்தார். அவரே ‘இனிமேல்’ பாடலின் முழு தமிழ் வரிகளையும் எழுதினார். இவ்வாறு தான் “இனிமேல்’ உருவாகி இன்று இந்த மேடையில் இருக்கிறது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜை எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று கேட்டால், விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் என்று நினைக்கிறேன். ஒரு முறை இவரை கேமராவில் பார்க்கும் போது இவரது தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதிலிருந்து தான் இந்த எண்ணம் உதயமானது. இந்த பாடல் ஆல்பத்தின் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது நான்கு நிமிடத்திற்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆழத்தை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சி தான்.  ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்  நிறை குறைகளை கூறுவதன் மூலம், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் ரிலேஷன்ஷிப்பை இதன் மூலம் சீர் தூக்கிப் பார்ப்பார்கள் என்கின்ற ஒரு சிறு நம்பிக்கை தான். எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எப்போதும் மிக நேர்மையாக கருத்து சொல்லுவார். அவருக்கு எங்கள் இணை பிடித்திருந்தது என்றே கூறினார்” என்றார். 

லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “நடித்தே ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குக் கிடையாது. முதலில் இனிமேல் ஆல்பம் பாடல் தொடர்பாக நடிக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் என்னை அணுகிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது, மேலும் நாம் ஏன் நடிக்க வேண்டும் என்கின்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. அந்த கேள்வியுடன் தான் அவர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது. அங்கு எனக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது, அந்தக் கதையை மிகவும் இயல்பாக அவர்கள் விவரித்த விதம் தான்.  அப்பொழுது எனக்கு ஏன் நடிக்கக்கூடாது என்கின்ற எண்ணமும் எழுந்தது. நான் நடித்து என்னுடைய உருவம் திரையில் தோன்றப் போகும் ஓரிரு கணங்களில் திரையின் பின்னால் அவரின் குரல் ஒலிக்கப் போகிறது என்கின்ற எண்ணமே என்னை சிலிர்க்கச் செய்தது. மேலும் என் திரைப்பயணத்தில் அது ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும் என்றும் தோன்றியது. அதன் பிறகு தான் நடிக்க சம்மதித்தேன். 

உண்மையாகவே எனக்கு நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்திருந்தால் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப்படம் பொல்லாதவன். அப்படத்தின் கதையைப் போல் ஒரு கதையினை ரெடி செய்து, என் அசோசியேட் இயக்குநரைக் கொண்டு அதை இயக்க வைத்து அதில் நானே நடித்திருப்பேன். ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எந்த ஆசையும் இல்லை. ஆக நடிக்க சம்மதித்ததற்கு 3 காரணங்கள் தான். மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்தது, முதற் காரணம். கமல்ஹாசன் சார் இரண்டாம் காரணம், ஸ்ருதிஹாசன் மற்றும் அவரின் குழுவினர் 3ஆவது காரணம். லியோ படத்தின் டப்பிங் பணியின் போது நான் கமல் சாருக்கு போன் செய்து இப்படி ஒரு டயலாக் படத்தின் இறுதியில் நீங்கள் பேச வேண்டும் சார் என்று கேட்டுக் கொண்டேன். எனக்காக ஒரு நாள் ஒதுக்கி, அந்த இறுதி டயலாக்கை ஐந்து மொழிகளிலும் வந்து பேசிக் கொடுத்துவிட்டு சென்றார். அவரே இந்த அளவிற்கு எனக்கு உதவும் போது, ராஜ்கமல் தரப்பு என்னுடைய தாய்வீடு போன்றது.  அவர்களிடமிருந்து என்ன கேட்டு வந்தாலும்,  என்னாலும் மறுக்க முடியாது என்பதே உண்மை. மேலும் அடுத்து மூன்று படம் இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன். அந்தப் பணிகளை துவங்கவில்லை என்றால் பிரச்சனையாகிவிடும். ஜூன் மாதத்தில் இருந்து என் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் துவங்கவிருக்கின்றன” என்று பேசினார்.