Skip to main content

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

vzvszvzv

 

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சமீபத்தில் ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ‘தலைவி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி கரோனா பரவல் காரணமாக தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

 

கரோனா 2வது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதால் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மஹாராஷ்டிராவில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பேன் இந்தியா படமான 'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து இருப்பதாகப் பட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தற்போது உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு திரைக்கு வரத் தயாராக இருந்த பல புதிய படங்களின் ரிலீசை தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தலைவி படத்தில் நடிக்கக் காரணம் இதுதான்” - கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரகசியத்தை உடைத்த நாசர்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 Actor Nasar - Kalaignar - Thalaivii Movie

 

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் நாசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

நிகழ்வில் நாசர் பேசியதாவது: “கலைஞர் அவர்களைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் எனக்கு இருக்கின்றன. கலைஞரோடு நான் பழகிய தருணங்கள் என் வாழ்க்கையில் மிகச் சிறந்தவை; மறக்க முடியாதவை. அப்படிப்பட்ட தருணங்களை எனக்கு வழங்கிய என் கலைஞருக்காக நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். பள்ளியில் நாடகங்களில் நடிக்கும்போது அவருடைய வசனங்கள் தான் எங்களுக்கான முதல் பயிற்சி. கலைஞருடைய வசனங்களைப் பேசுவதில் ஒரு பெரிய சுகம் இருக்கிறது. நான் பல போட்டிகளில் அவருடைய வசனங்களைப் பேசி பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.

 

சினிமா வாய்ப்பு வாங்குவதற்குக் கூட பராசக்தி வசனங்களைத் தான் நான் பேசினேன். நான் அரசியல்வாதி அல்ல. ஆனால் அரசியலை அறிந்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அறிவுரீதியாக நான் அரசியலைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். தான் எழுதிக் கொடுத்த வசனங்களை எவ்வாறு படமாக்குகிறார்கள் என்பதை கலைஞர் பெரும்பாலும் நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கே சென்று பார்ப்பார். என்னுடைய கலைவாழ்வில் முக்கியமான ஒரு படைப்பு கலைஞர் எழுதிய தென்பாண்டி சிங்கம் நாடகம். 

 

கலைஞர் என்னை வீட்டுக்கு அழைத்தபோது பதற்றத்துடன் சென்றேன். அங்கு அவர் அவராகவே இருந்தார். என்னை அவ்வளவு அன்புடன் நடத்தினார். அவர் எழுதிய பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர் போன்ற எளிமையான மனிதரை நான் பார்த்ததில்லை. அவர் என்னை பயமுறுத்தும் ஒரு தலைவனாக எப்போதுமே இருந்ததில்லை. ஒரு உறவினர் போல் என்னோடு அவர் பேசுவார். அதே நேரத்தில் தான் நம்புகின்ற கொள்கைக்கு எதிராக இருப்பவர்களிடம் தீப்பிழம்பாக அவர் நிற்பார். அதுதான் கலைஞர். 

 

அவர் எழுதிய ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு செய்தி. ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு கொள்கை. சமீபத்தில் வெளிவந்த 'தலைவி' என்கிற படத்தில் நான் கலைஞராக நடித்தேன். நான் ஆராதிக்கின்ற ஒரு மனிதனாக நான் நடிப்பது என்பது மிகப்பெரிய பெருமை. அதையே என் வாழ்க்கையின் முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். அவருடைய இளம் வயதில் அவர் பேசிய பேச்சுக்கள் நேற்று பேசியவை போல் இருக்கின்றன. சினிமாவில் எவ்வளவோ வேடங்களில் நடித்திருந்தாலும் கலைஞர் வேடத்தில் நடிக்கும்போது எனக்கு ஒரு பதற்றம் இருந்தது. மிகுந்த பெருமித உணர்வோடு அதில் நான் நடித்து முடித்தேன். கலைஞரை நான் காலம் முழுவதும் கொண்டாடுவேன்.”

 

 

Next Story

‘தலைவி’ பட இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

rajinikanth

 

ஏ.எல். விஜய் இயக்கத்தில், கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான 'தலைவி' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். நடிகை கங்கனா ரணாவத்தின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டதுடன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘தலைவி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஏ.எல். விஜய்யை அலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். நடிகர் ரஜினிகாந்திற்காக சிறப்பு காட்சியைப் படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் படம் பார்த்த ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டுவந்துள்ள விதத்தைத் தான் மிகவும் ரசித்தாகக் கூறி இயக்குநர் ஏ.எல். விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.